பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவை தண்டித்து வருகிறது தமிழக அரசு: சித்தார்த் கடும் சாடல்

பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவை தண்டித்து வருகிறது தமிழக அரசு: சித்தார்த் கடும் சாடல்
Updated on
1 min read

பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவை தமிழக அரசு தண்டித்து வருவதாக, நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக சாடியுள்ளார்.

இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி வரி அமலாகியிருக்கும் நிலையில், தமிழக அரசு நகராட்சி வரி 30 சதவீதம் உண்டு என்று அறிவித்துள்ளது. இதனால் தமிழ் திரையுலகினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனைக் கண்டித்து வரும் திங்கட்கிழமை (3 ஜூலை) முதல் திரையரங்குகளை மூடுவது என முடிவெடுத்துள்ளார்கள்.

இந்நிலையில், தமிழக அரசை கடுமையாக தனது ட்விட்டர் பக்கத்தில் சாடியுள்ளார் நடிகர் சித்தார்த். ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:

திரைப்படங்களுக்கு யு சான்றிதழ் வழங்குவதிலும், வரிச் சலுகை வழங்குவதிலும் தமிழகத்தில் பல ஆண்டுகளாக பெரும் ஊழல் நடந்து வருகிறது. இவை ஜிஎஸ்டியால் ஒழிக்கப்படும் என்பதே ஒரே ஆதாயம். அதுதவிர்த்து 30% சேவை வரியும் இருக்கும் என்றால் ஜிஎஸ்டி ஒரு தவறே.

டிக்கெட் விலையைப் பொருத்தவரையில் மக்கள் ஜிஎஸ்டியும் சேவை வரியும் சேர்த்து வசூலிக்கப்படுமா என்ற குழப்பத்தில் உள்ளனர். 18% ஜிஎஸ்டி இருக்கும் இல்லையேல் மொத்தமாக 28% வசூலிக்கப்படும் என நம்புகிறேன். அப்படி இல்லையென்றால் வேலைநிறுத்தம்தான் செய்ய வேண்டும்.

தமிழ் சினிமா துறையை ஆண்டாண்டு காலமாக தமிழக அரசு தண்டித்து இருக்கிறது. யு சான்றிதழ் வழங்குவதற்கும், வரி விலக்கு வழங்குவதற்கும் பல்வேறு ஊழல்கள் நடந்திருக்கின்றன. இவைபோதாது என்று தற்போது 30% உடன் ஜிஎஸ்டி வேறா? வெட்கக்கேடு.

இப்போது ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகமும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான இத்தகைய குழப்பங்களில் நம்மை வைத்து விளையாடுகிறார்கள்.

ஜிஎஸ்டி என்பது ஒரே தேசம் ஒரே வரி.. இதில் விதிவிலக்கு ஏதும் இல்லை"

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in