அப்புச்சி கிராமம் - திரை விமர்சனம்

அப்புச்சி கிராமம் - திரை விமர்சனம்
Updated on
2 min read

உலகமே கிராமமாகச் சுருங்கிவிட்டதில் தமிழ் இயக்குநர்களும் இப்போது அறி வியல் புனைகதைகளை அசராமல் படமாக்க முனைகிறார்கள். அறிவியல் புனைவைக் கோடம்பாக்கத்தின் மசாலாவுடன் கலக்கும்போதுதான் புனைவு பொங்கலாகிவிடுகிறது. வாழ்க்கையின் முடிவு கண் முன்னால் தெரிந்துவிட்டால், எல்லோரும் மகாத்மா ஆகிவிடுவார்கள் என்ற சாத்தியத்தை, விண்கல் விழப்போவதை எண்ணிக் கலங்கும் ஒரு கிராமத்தின் மீது பொருத்திப் பார்த்திருக்கிறார் இயக்குநர். அது திரைப்படமாகப் பொருத்தமாக வந்திருக்கிறதா?

பூமியை நோக்கி ஆயிரக்கணக்கான எரிகற்கள் வந்துகொண்டிருப்பதைக் கண்டுபிடிக்கிறார்கள். அடுத்த எட்டு நாட்களில் பெரிய எரிகல் ஒன்று பூமியைத் தாக்கவிருக்கிறது. இந்தச் செய்தியை அறிந்துகொள்ளும் அப்புச்சி கிராமத்தின் மக்களிடம் பரபரப்பு தொற்றிக்கொள்கிறது.

விண் கல் விழுந்ததும் மொத்தக் கிராமமும் கூண்டோடு கைலாசம் போகப்போகிறது என்று அவர்கள் நம்ப ஆரம்பித்ததும், அந்த ஊர் மக்களின் மனநிலையில் மாற்றம் நிகழ ஆரம்பிக்கிறது. கெட்டவர்கள் எல்லாம் நல்லவர்களாகிறார்கள் கடனைக் கொடுத்தவனும், காசை வெளியே காட்டாத கஞ்சனும் மனம் மாறுகிறார்கள். காதலை ஏற்காத இளம்பெண் தன்னை நேசித்த இளைஞனுக்கு இதயத்தில் இடம்கொடுக்கிறாள். உலகத்தோடு சேர்ந்து தங்கள் கிராமம் அழியும் முன்பு கடைசி கடைசியாக ஊர்த் திருவிழாவையும் கொண்டாடுகிறார்கள். ஊரைத் தங்கள் தனிப்பட்ட பகையால் பிரித்துவைத்திருந்த அண்ணன் - தம்பிகளும் (ஜி.எம்.குமார் - ஜோ மல்லூரி) திருந்தி ஒருவரையொருவர் நேசிக்கிறார்கள்.

ஆனால் எட்டு நாட்களில் அப்புச்சி கிராமத்து மக்கள் எதிர்பார்த்த மாதிரி எதுவும் நடக்கவில்லை. இதன் பிறகு கிராம மக்கள் பழையபடி மாறுகிறார்களா அல்லது புதிய வாழ்க்கையைத் தொடர்கிறார்களா என்பதுதான் படம்.

ஒரு திரைக்கதையின் மையமாகச் சுழல்வது அதன் முக்கியப் பிரச்சினை. இந்தக் கதைக்கு வலுவான, புதிதான முக்கியப் பிரச்சினை கிடைத்தும் பலவீனமான கதாபாத்திரங்களையே படைத்திருக்கிறார்கள். சுற்றிவளைக்காமல் நேரடி யான கதை சொல்லல் முறைக்கு வாய்ப்பு கிடைத்தும் பாத்திரங்கள் அழுத்தமாக, உணர்வுபூர்வமாகச் சித்தரிக்கப்படாததால் படத்துடன் ஒன்றமுடியால் போகிறது.

எரிகல் விழுந்தாலும் கிராமத்தை விட்டுச் செல்ல மாட்டோம் என்கிறார்கள் மக்கள். அப்படி அவர்கள் சொல்லும் அளவுக்கு எதற்காகத் தங்கள் கிராமத்தை நேசிக்கிறார்கள் என்பதை இயக்குநர் சரிவரக் காட்சிப்படுத்தத் தவறிவிட்டார்.

கதையில் இரண்டு காதல்கள் உள்ளன. இரண்டுமே கண்டதும் காதலாக இருக்கிறது. காதல் வளர்ப்பதையாவது ஆழமாகச் சித்தரிப்பார் என்று பார்த்தால் அதுவும் இல்லை. காதல் என்றில்லை எல்லாக் காட்சிகளிலுமே நாடகத்தனம் துருத்திக்கொண்டு தெரிகிறது. நடிகர்களைச் சரிவர வேலை வாங்காததாலும் மொத்தப் படத்தின் காட்சியமைப்புகளும் பலவீனமான இருக்கின்றன.

முக்கியமாக இதுபோன்ற இயற்கைப் பேரழிவை மையப்படுத்தும் படங்களில் பேரழிவுக் காட்சிகளுக்கான பில்ட் அப்பும், சம்பவம் நிகழ்வதும் பிரமாண்டமாகவும் வியப்பூட்டுவதாகவும் இருந்தால் மட்டுமே பார்வையாளர்களைக் கவரமுடியும். படத்தின் பட்ஜெட் காரணமாக எரிகல் கிராபிக்ஸ் காட்சிகள் மிகவும் சுமாராக உருவாக்கப்பட்டிருக்கின்றன. இப்படிப் படத்தின் பலவீனங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

தத்துவச் செறிவுடன் அற்புதமான வாழ்வியல் சித்திரமாக உருப்பெற்றிருக்கக்கூடிய படம் இது. அல்லது விறுவிறுப்பான அறிவியல் புனைவாக மாறியிருக்க வேண்டியது. ஆனால் தேய்ந்துபோன படிமங்கள் கொண்ட திரைக்கதை, எந்தவிதத்திலும் ஆச்சரியம் தராத திருப்பங்கள், வலுவற்ற சம்பவங்கள், ‘சவ சவ’ சித்தரிப்புகள் வழியே இதைச் சராசரிப் படமாக்கிவிட்டார் இயக்குநர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in