

இரட்டை வரிவிதிப்பு தொடர்பாக தமிழக அரசுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்வீட் செய்துள்ளார்.
ஜிஸ்டி மற்றும் கேளிக்கை வரி என இரட்டை வரி விதிப்பால், தமிழகத்தில் திரையரங்குகளில் அனைத்து காட்சிகளும் மூன்றாவது நாளாக இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தமிழக அரசிடம் தமிழ் திரையுலகினர் பலரும் நேரடியாக கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து தமிழக அரசு இன்னும் எந்தவொரு அரசாணையும் பிறப்பிக்கவில்லை.
மேலும், தமிழ் திரையுலகினர் பலரும் இப்பிரச்சினை குறித்து ரஜினிகாந்த் குரல் கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வந்தார்கள். ஆனால், ரஜினி அமெரிக்காவில் ஓய்வு எடுத்து வருவதால், சென்னை திரும்பியது இது குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் ரஜினி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்த் திரையுலகை நம்பியுள்ள லட்சோப லட்ச மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு திரையுலகினர் கோரிக்கையை பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்" என்று ட்வீட் செய்துள்ளார்.
இரட்டை வரிவிதிப்பு குறித்து ரஜினியும் குரல் கொடுத்திருப்பதால், விரைவில் இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.