

'சுவாதி கொலை வழக்கு' என்ற தலைப்பை 'நுங்கம்பாக்கம்' என மாற்றியுள்ளது படக்குழு. இதற்கான காரணத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.
'சுவாதி கொலை வழக்கு' என்ற படத்தின் தலைப்பை தற்போது 'நுங்கம்பாக்கம்' என மாற்றியுள்ளார்கள். மேலும், வழக்கு நிலுவையில் உள்ள போது அந்த வழக்கை திரைப்படமாக எடுத்தால் அதை தணிக்கை செய்ய இயலாது என்று புதிய விதிகள் வகுப்பட்டுள்ளதால் இக்கதையில் கற்பனையாக சில மாற்றங்கள் செய்து, திரைப்படத்தின் தலைப்பையும் மாற்றியுள்ளார்கள்.
இப்படம் சுவாதிக்கோ, ராம்குமாருக்கோ, காவல்துறைக்கோ எதிராக எடுக்கப்பட்ட படம் இல்லை என்று இயக்குநர் ரமேஷ் செல்வன் தெரிவித்துள்ளார். மேலும், சுவாதியின் குடும்பத்தைப் பற்றியோ, ராம்குமாரின் குடும்பத்தை பற்றியோ ஒரு காட்சியும் இப்படத்தில் இல்லை. நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஒரு பெண் வெட்டப்பட்ட பின், அந்த கொலையாளி யார்? அவனை எவ்வாறு காவல்துறை கைது செய்தது. இது மட்டும் தான் இந்தப் படம். சுவாதியோட தனிப்பட்ட வாழ்க்கையோ, ராம்குமாரின் தனிப்பட்ட வாழ்க்கையோ இப்படத்தில் இல்லை என்று படக்குழு தெரிவித்துள்ளது. நாட்டில் இப்படி ஒரு சம்பவம் இனி நடக்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்தோடு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது படக்குழு.
'சுவாதி கொலை வழக்கு' படத்தின் பின்னணி
சூளைமேட்டைச் சேர்ந்த பெண் ஐ.டி ஊழியர் சுவாதி கடந்த ஆண்டு ஜூன் மாதம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார், மின் வயரை வாயால் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், ‘சுவாதி கொலை வழக்கு’ என்ற பெயரில் ஒரு திரைப்படம் வெளிவர இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது. மேலும் இப்படத்தின் டிரெயிலர், சமூக வலைதளங்களில் வெளியானது. இந்நிலையில் சுவாதியின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன், டிஜிபியை சந்தித்து இப்படம் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு புகார் தெரிவித்தார்.
சுவாதியின் தந்தை அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதனுக்கு டிஜிபி உத்தரவிட்டார். அதன்படி, மத்திய குற்றப்பிரிவு போலீஸார் ரமேஷ் செல்வன் மீது வழக்கு பதிந்துள்ளனர்.
இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கூறும்போது, ''எந்த விதமான முன் அனுமதியும் இன்றி சுவாதி கொலை வழக்கு படமாக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் ட்ரெய்லரும் சட்ட விரோதமாக வெளியிடப்பட்டுள்ளது. எனவே, அவர் மீது வழக்கு பதிந்துள்ளோம்'' என்றனர்.