

‘லிங்கா’ படத்தின் கதை ‘முல்லை வனம் 999’ படத்தின் கதையல்ல. மேலும், முல்லை பெரியாறு, பென்னிகுயிக் வரலாற்றுக்கு தனிப்பட்ட முறையில் யாரும் உரிமை கோர முடியாது’ என லிங்கா இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், கதாசிரியர் பொன் குமரன் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள, லிங்கா படத்துக்கு தடை கோரி, மதுரை சின்ன சொக்கிகுளத்தைச் சேர்ந்த ரவிரத்தினம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், முல்லை பெரியாறு அணை, அணையைக் கட்டிய பென்னிகுயிக் வரலாற்றை பின்னணியாகக் கொண்டு ‘முல்லைவனம் 999’ என்ற படத்தை இயக்கி வருகிறேன். இப்படத்தின் கதையை 24.2.2013-ல் யூ டியூப்பில் பதிவேற்றம் செய்தேன். அந்தக் கதையை திருடி லிங்கா படத்தை தயாரித்துள்ளனர் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு ஏற்கெனவே விசா ரணைக்கு வந்தபோது, லிங்கா படத் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், கதாசிரியர் பொன் குமரன், தியேட்டர் உரிமை யாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் டிஜிபி பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், ‘லிங்கா’ இயக் குநர் கே.எஸ். ரவிக்குமார், கதாசி ரியர் பொன்குமரன் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் நேற்று பதில் மனு தாக்கல் செய்தனர்.
முல்லை பெரியாறு அணை பிரச்சினையை சார்ந்து லிங்கா படத்தின் கதை இருப்பதால், அந்தக்கதை என்னுடையது என மனுதாரர் கூற முடியாது. மனுதாரர் அவருடைய கதையை யூ டியூப்பில் முழுமையாக வெளியிடவில்லை. அவரது கதையை நாங்கள் திருடியதாக கூறுவதை மறுக்கிறோம்.
பென்னிகுயிக் வாழ்க்கை வரலாற்றுக்கு தனிப்பட்ட முறையில் யாரும் உரிமை கோர முடியாது. லிங்கா படத்தை பொறுத்தவரை, இன்னும் கதை முழுமையாக வெளியாகவில்லை. அனைவரும் யூகத்தில் கூறுகின்றனர். மூலக்கதை பொன்குமரனுக்கு சொந்தமானது.
பொன்குமரன் அவரது கதையை ‘கிங்கான்’ என்ற பெயரில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் 15.10.2010-ல் பதிவு செய்து வைத்திருந்தார். அந்தக் கதைதான் லிங்காவின் கதை. மனுதாரர் கூறியவாறு நாங்கள் எந்த திருட்டிலும் ஈடுபடவில்லை. எனவே, மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
பொன்குமரன் பதில் மனு
முல்லை பெரியாறு அணை பிரச்சினையை கருவாக வைத்து, பலர் பல்வேறு கோணங்களில் கதைகளை உருவாக்கலாம். அந்தக் கதைக்கு ஒருவர் மட்டும் உரிமை கோர முடியாது. மனுதாரர் அவரது கதையை யூ டியூப்பில் பதிவேற்றம் செய்தது எனக்குத் தெரியாது. மனுதாரர் எப்படி லிங்கா கதையும், முல்லைவனம் 999 படத்தின் கதையும் ஒன்று என்ற முடிவுக்கு வந்தார் எனத் தெரியவில்லை. அவரது கதையை திருடியதாகக் கூறுவது உண்மையல்ல. லிங்கா திருடிய கதை என்பதை ஆட்சேபிக்கிறேன்.
லிங்காவின் கதை ஊடகங்களிலும் வெளிவரவில்லை. மனுதாரர் தனது மனுவில், லிங்கா படத்தின் கதையை விளக்கமாகத் தெரிவிக்கவில்லை. படத்தை பார்க்காமல் மனுதாரர் லிங்கா எனது கதைதான் என எப்படி கூறுகிறார் என்பது தெரியவில்லை. ‘முல்லைவனம் 999’ வெளியாகவில்லை. வெளியாகாத கதைக்கு மனுதாரர் காப்புரிமை கோர முடியாது. மனுதாரருக்கு அவரது உரிமை என்ன என்பது அவருக்கே தெரியவில்லை. அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.