Last Updated : 27 Jul, 2017 03:08 PM

 

Published : 27 Jul 2017 03:08 PM
Last Updated : 27 Jul 2017 03:08 PM

சிறுமுதலீட்டு படங்களுக்கு  திரையரங்குகளில் முன்னுரிமை அளிக்கவேண்டும்: இயக்குநர் பாக்யராஜ் வேண்டுகோள்

சிறுமுதலீட்டு படங்களுக்கு  திரையரங்குகளில் முன்னுரிமை அளிக்கவேண்டும் என்று இயக்குநர் பாக்யராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரைட்வ்யூ சினிமாஸ் தயாரிக்க, ஆர்பிஎம் சினிமாஸ் வெளியிடும் படம் 'சதுரஅடி 3500'. இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. தயாரிப்பாளர்  எஸ்.தாணு படத்தின் இசை மற்றும் ட்ரெய்லரை வெளியிட இயக்குநர் பாக்யராஜ் பெற்றுக் கொண்டார்.

இவ்விழாவில் நாயகன் நிகில் மோகன், நடிகை மேக்னா முகேஷ், இயக்குநர் ஜாய்சன், ஒளிப்பதிவாளர் பிரான்ஸிஸ், எடிட்டர் ஆனந்த், தயாரிப்பாளர் ஜே எஸ் கே கோபி உள்ளிட்ட படக்குழுவினரோடு, திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.

இவ்விழாவில் இயக்குநர் பாக்யராஜ் பேசியதாவது:

நடிகை இனியா இப்படவிழாவில் கலந்து கொள்ளாதது குறித்து கருத்து தெரிவிக்கவேண்டும் என்றால், அவர் வராததால் நஷ்டம் அவருக்கு தான் ஒழிய படக்குழுவிற்கு இல்லை. ‘சுவர் இல்லாத சித்திரங்கள் ’ படத்தில் நான் ஒரு வசனம் எழுதியிருப்பேன். ‘கண்ணடிச்சு கூப்பிட்டும் வராத பொம்பளை கைய பிடிச்சு இழுத்தா மட்டும் வந்துடவா போவுது..’ என்று எழுதியிருப்பேன். அவர்களுக்கு தான் இங்கு வரவேண்டிய பொறுப்பு இருக்கவேண்டும். அவர்கள் வராத விஷயம் பெரிய பிரச்சனையாக மாறிவிட்டதால் இனி அவர் எல்லா விழாக்களிலும் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கிறேன்.

அனைத்து திரையரங்குகளிலும் எப்போதும் ஏதேனும் ஒரு சிறிய படங்கள் ஓடிக் கொண்டிருக்க வேண்டும் என்ற ஒரு சட்டத்தை ஏன் போடக்கூடாது. எப்போது பார்த்தாலும் பெரிய நடிகர்கள் படம் தான் ஒடவேண்டும் என்று எந்த நியதியும் இல்லையே?.

ஒவ்வொரு திரையரங்கிலும் சிறிய படங்களுக்கு காட்சிகளை ஒதுக்க வேண்டும். அதற்காக காலை காட்சியை ஒதுக்கக்கூடாது. பெரிய நடிகர்கள் நடித்திருந்தால் அந்த படத்தை காண ரசிகர்கள் காலை காட்சிக்கு வருவார்கள். ஆனால் புதுமுகங்கள் நடித்திருக்கும் சின்ன படங்களுக்கு ரசிகர்கள் வரமாட்டார்கள். இதை காரணமாக காட்டி திரையரங்கிலிருந்து படத்தை தூக்கிவிடுகிறார்கள்.  படம் பார்த்த ரசிகர்களின் பேச்சால் பரவுவதற்குள் படத்தை தூக்கிவிட்டால் சின்ன படங்கள் எப்படி ஒடும்.

அதனால் சிறுமுதலீட்டு படங்களுக்கு  திரையரங்குகளில் முன்னுரிமை அளிக்கவேண்டும். கண்டிப்பாக ஏதேனும் ஒரு சின்ன படங்கள் திரையரங்குகளில் ஓடிக் கொண்டேயிருக்க வேண்டும் என்பது போல் ஒரு நடைமுறையை உருவாக்கவேண்டும். அதே போல் ஏசி வசதி, பார்க்கிங் வசதி போன்ற எல்லா வசதிகளும் கொண்ட நல்ல திரையரங்குகளும் சின்ன படங்களை திரையிட முன்வர வேண்டும்.

இந்த படத்தின் தலைப்பைப் பார்த்தவுடன் இது ஒரு சஸ்பென்ஸ் படமாக இருக்கும் என்று நினைத்தேன். இந்த வருடமே ஒரு சஸ்பென்ஸான வருடம் தான். ஜெயலலிதா அம்மா மருத்துவமனையில் இருந்தது சஸ்பென்ஸாக இருந்தது. அதற்கு பின் இவர்கள் வருவார்களா? அவர்கள் வருவார்களா? என்ற சஸ்பென்ஸ் இருந்தது. அப்புறம் இவர்கள் அங்கே போய் சேர்ந்துவிடுவார்களா? அவர்கள் இங்கே போய் சேர்ந்துவிடுவார்களா? என்ற சஸ்பென்ஸ் இருந்தது. அப்புறம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தேர்தலில் வெங்கய்ய நாயுடுவுக்கு அந்த கட்சிகாரர்களே ஒட்டுபோடுவார்களா? மாட்டார்களா? என்ற சஸ்பென்ஸ் இருந்துகொண்டேயிருக்கிறது. இது போல் ஏகப்பட்ட சஸ்பென்ஸ்களுடன் இருக்கின்ற இந்த காலக்கட்டத்தில் இந்த 'சதுர அடி 3500' படம் வெளியாவது விசேஷம்.

இவ்வாறு இயக்குநர் பாக்யராஜ் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x