

பிரபு ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கவுள்ள தமிழ் படத்தின் ஒளிப்பதிவாளராக பி.சி.ஸ்ரீராம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
'வேலைக்காரன்' மற்றும் 'சிவகார்த்திகேயன் - பொன்.ராம்' படங்களைத் தொடர்ந்து 24 ஏ.எம் நிறுவனம் தனது அடுத்த படத்தின் முதற்கட்ட பணிகளைத் துவங்கியுள்ளது. பிரபு ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்தில் நிவின் பாலி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இப்படத்தின் அறிமுகம் 'ரெமோ' படத்தின் பர்ஸ்ட் லுக் அறிமுக விழாவில் நடைபெற்றது. ஆனால், தற்போது தான் அப்படத்தின் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதன் படப்பிடிப்பு துவங்கும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 24 ஏ.எம் நிறுவனத்தின் உரிமையாளரான ஆர்.டி.ராஜா இப்படத்துக்கு கதை எழுதியுள்ளார். திரைக்கதை எழுதி இயக்கவுள்ளார் பிரபு ராதாகிருஷ்ணன்.
தற்போது நிவின் பாலியுடன் நடிக்கவுள்ள நடிகர், நடிகைகள் தேர்வை தீவிரப்படுத்தியுள்ளது படக்குழு.