

தியாகராஜன் குமாரராஜா இயக்கி வரும் படத்தின் ஒளிப்பதிவாளர் பொறுப்பிலிருந்து பி.சி.ஸ்ரீராம் விலகியுள்ளார்.
'ஆரண்ய காண்டம்' படத்தைத் தொடர்ந்து, நீண்ட நாட்கள் கழித்து தனது அடுத்த படத்தின் பணிகளைத் தொடங்கினார் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா. ஃபகத் பாசில், விஜய் சேதுபதி, சமந்தா உள்ளிட்ட பலர் நடித்து வந்த இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வந்தார் பி.சி.ஸ்ரீராம்.
இப்படத்தின் பெயரை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவிக்கவில்லை. 'அநீதி கதைகள்' என இப்படத்துக்கு பெயரிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பணமதிப்பு நீக்கம் பிரச்சினை ஏற்பட்ட போது, இப்படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது. அதனைத் தொடர்ந்து இன்னும் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை.
தற்போது இந்திப் படமான 'பேட்மேன்', நிவின் பாலி நடிக்கவுள்ள தமிழ் படம் மற்றும் ஜெயந்திரா இயக்கவுள்ள தெலுங்கு படம் ஆகியவற்றுக்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளதால், தியாகராஜன் குமாரராஜா படத்திலிருந்து பி.சி.ஸ்ரீராம் விலகியுள்ளார்.
விரைவில் தொடங்கவுள்ள தியாகராஜன் குமாரராஜா படத்தின் ஒளிப்பதிவாளராக பி.எஸ்.வினோத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படப்பிடிப்பு தொடங்கப்படுவதற்கான பணிகளில் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறது படக்குழு.