ஒரு குப்பை கதை படத்தை வெளியிடும் உதயநிதி ஸ்டாலின்

ஒரு குப்பை கதை படத்தை வெளியிடும் உதயநிதி ஸ்டாலின்
Updated on
1 min read

நடன அமைப்பாளர் தினேஷ் நாயகனாக அறிமுகமாகும் 'ஒரு குப்பை கதை' படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடவுள்ளார்.

காளி ரங்கசாமி இயக்கத்தில் நடன அமைப்பாளர் தினேஷ் நாயகனாக அறிமுகமாகும் படம் 'ஒரு குப்பை கதை'. இப்படத்தை சமீபத்தில் பார்த்த உதயநிதி ஸ்டாலின், இதன் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ளார்.

பல படங்களுக்கு நடன அமைப்பாளராக பணிபுரிந்து, தேசிய விருதையும் வென்றுள்ளார். இவர் நாயகனாக அறிமுகமாகும் படம் 'ஒரு குப்பை கதை'. இயக்குநர் அஸ்லாம் தயாரித்திருக்கும் இப்படத்தை அவரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த காளி ரங்கசாமி இயக்கியுள்ளார்.

இப்படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றியிருப்பது குறித்து அஸ்லம், "நல்ல படங்களின் மேல் அக்கறையுள்ள உதயநிதி ஸ்டாலின், சமீபமாக தனது படம் தவிர வேறெந்த படத்திலும் கவனம் செலுத்தாமல் இருந்தார். எங்கே நம்ம படத்தை பார்க்கப் போகிறார்? என நினைத்தேன். ஆனால், உடனடியாக நேரம் ஒதுக்கி படம் பார்த்தவர், பெரிதும் பாராட்டினார்.

படம் அடித்தட்டு மக்களின் பிரச்சனையைப் பேசுகிறது. இக்காலகட்டத்தில் இது போன்ற படம் அவசியம் எனக் குறிப்பிட்டவர், டான்ஸ் மாஸ்டர் தினேஷ் -க்குள் ஒரு மிகச் சிறந்த நடிகன் ஒளிந்திருப்பதை, தான் படம் பார்த்தபோது உணர்ந்ததாக கூறினார்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தனது நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் 'ஒரு குப்பை கதை' படத்தை வெளியிட சம்மதமும் தெரிவித்துள்ளார்.

ஒளிப்பதிவாளராக மகேஷ் முத்துச்சாமி, பாடலாசிரியராக நா.முத்துக்குமார், இசையமைப்பாளராக ஜோஸ்வா ஸ்ரீதர், எடிட்டராக கோபிகிருஷ்ணா ஆகியோர் பணிபுரிந்திருக்கிறார்கள். இப்படத்தில் தினேஷுக்கு நாயகியாக மனிஷா யாதவ் நடித்திருக்கிறார். யோகி பாபு, ஜார்ஜ், சுஜா, ஆதிரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in