

எடிட்டர் ஆண்டனி இயக்கி வரும் படத்தில் நடிகர் சத்யராஜ் நாயகனாக நடித்து வருகிறார்.
தமிழ்த் திரையுலகின் பல பிரம்மாண்டமான படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் எடிட்டர் ஆண்டனி.
ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஐ', கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் 'அனேகன்', கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் 'என்னை அறிந்தால்' உள்ளிட்ட பல படங்களுக்கு எடிட்டராக பணியாற்றி வருகிறார்.
"விரைவில் படம் இயக்குவேன்" என்று பல பேட்டிகளில் தனது மனதில் இருக்கும் ஆசையை வெளிப்படுத்தி இருந்தார் எடிட்டர் ஆண்டனி. இடையே ஒரு படம் தொடங்கப்பட்டு, பேச்சுவார்த்தை அளவிலே நின்றது.
இந்நிலையில், தற்போது எடிட்டர் ஆண்டனி இயக்கி வரும் படத்தில் சத்யராஜ் நாயகனாக நடித்து வருவதாக செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக எடிட்டர் ஆண்டனியை தொடர்பு கொண்டு கேட்டபோது, "சத்யராஜ் நடித்து வருவது உண்மை தான். ஆனால், படத்தின் பெயர் மற்றும் இதர விவரங்கள் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து விரைவில் வெளியாகும்" என்று தெரிவித்தார்.