

'சங்கமித்ரா' விவகாரம் தொடர்பாக ஸ்ருதிஹாசனை மறைமுகமாக தனது ட்விட்டர் பக்கத்தில் சாடியுள்ளார் குஷ்பு
சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகவுள்ள 'சங்கமித்ரா' படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் விலகியுள்ளார். அதற்கான காரணம் குறித்து "முழுமையான ஸ்கிரிப்ட் அவருக்கு தரப்படவில்லை. படப்பிடிப்பு தேதிகளும் சரியாக முடிவு செய்யப்படவில்லை. இதுவே அவரது முடிவுக்குக் காரணம்" என்று ஸ்ருதிஹாசன் தரப்பு தெரிவித்தது. இக்குற்றச்சாட்டை தயாரிப்பு தரப்பு மறுத்துள்ளது.
சமீபத்தில் ஸ்ருதிஹாசன் அளித்த பேட்டிகளில் கூட 'சங்கமித்ரா' படம் குறித்து பேச விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஸ்ருதிஹாசனை மறைமுகமாக குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் சாடியுள்ளார். 'சங்கமித்ரா' படம் குறித்து குஷ்பு கூறியிருப்பதாவது:
’சங்கமித்ரா’, இந்தியாவில் தயாரிக்கப்படும் படங்களில் மிக அதிக பொருட்செலவில் தயாராகும் படம். அது சரியான திட்டமிடுதல் இல்லாமல் முடியாது. ’சங்கமித்ரா’ திரைக்கதை முழுமையாக தயாராகவில்லை என சிலர் கூறுவதை கேட்கிறேன்.
கடந்த 2 வருடங்களாக வேலை நடைபெற்று வருகிறது. தொழில்முறையை பின்பற்றாதவர்களுக்கு அதெல்லாம் தெரியாது. ’சங்கமித்ரா’ மாதிரியான படத்துக்கு படப்பிடிப்பு வேலை என்பது 30 சதவிதம் தான். 70 சதவீத வேலை படப்பிடிப்புக்கு முன்பே செய்யப்படுகிறது.
தங்கள் குறைகளுக்கு மற்றவர்களை குறை சொல்வது ஏன்?. திராட்சை புளித்துவிட்டதா?. ஒரு கௌரவமான பாரம்பரியத்தை தொடர்பவர்களிடமிருந்து இன்னும் கூட சிறுது தொழில்முறை அணுகுமுறையை எதிர்பார்க்கிறேன். உங்கள் சொந்தத் தவறுகளை பெருந்தன்மையாக ஏற்றுக்கொள்வது உங்களது எதிர்காலத்துக்கு உதவியாக இருக்கும்.
இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்