

கோவா சர்வதேசத் திரைப்பட விழாவில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'கோச்சடையான்' திரைப்படம் திரையிடப்பட்டது. ஆனால் அந்த நிகழ்ச்சியை ரஜினிகாந்த் புறக்கணித்துவிட்டார்.
2014-ம் ஆண்டுக்கான சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடந்து வருகிறது. இதில் இந்தியாவில் முதன்முறையாக பர்ஃபார்மன்ஸ் கேப்ட்சரிங் (performance capturing) தொழில்நுட்பத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான 'கோச்சடையான்' திரைப்படம் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை திரையிடப்பட்டது.
இதற்கான நிகழ்ச்சியில் படத்தில் நடித்த ரஜினிகாந்த் மற்றும் இயங்குநர் சவுந்தர்யா ஆகியோர் பங்கேற்பார்கள் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது.ஆனால் கோச்சடையான் படம் திரையிடப்படும் போது அந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்கவில்லை.
இருப்பினும் நிகழ்ச்சியின்போது 'கோச்சடையான்' படத்தின் இயக்குநரும் ரஜினியின் மகளுமான சவுந்தர்யா அஸ்வின், ரஜினியின் மனைவி லதா ஆகியோர் பங்கேற்றனர். கோச்சடையான் திரைப்படம் விழாவில் திரையிடப்படுவதற்கு முன் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவில்லை என்றும் அவர் வேறு சில பணிக்காக பெங்களூரு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் தொகுப்பாளர்களால் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய சவுந்தர்யா ரஜினிகாந்த், "இந்த படத்தின் மூலம் எனக்கு சர்வதேசத் திரைப்பட விழாவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த படத்தின் மூலம் நான் சினிமாவுக்கு அறிமுகமானதை பெருமையாக கருதுகிறேன். எனது தந்தை இங்கு இல்லை. இந்தியாவில் முதன்முறையாக பர்ஃபார்மன்ஸ் கேப்ட்சரிங் தொழில்நுட்பத்தில் இந்தியாவுக்கு கொண்டுவர அவர் துணையாக இருந்தார்" என்றார்.