

ஓய்வூக்காக அமெரிக்கா சென்றிருந்த நடிகர் ரஜினி, நேற்று சென்னை திரும்பினார்.
நடிகர் ரஜினி, 2.0 படப்பிடிப்பை தொடர்ந்து, கடந்த மே மாதத்திலிருந்து பா.இரஞ்சித் இயக்கும் ‘காலா’ படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். அந்த படத்தின் முக்கிய காட்சிகள் மும்பை தாராவி பகுதியில் படமாக்கப்பட்டு வருகிறது. 2-ம் கட்ட படப்பிடிப்புக்காக கடந்த மாதம் மும்பை சென்ற ரஜினி, அங்கிருந்து ஜூன் இறுதியில் அமெரிக்கா சென்றார். அங்கு ஓய்வுக்காக சென்றதாகவும், அங்கு சில மருத்துவப் பரிசோதனைகள் செய்து கொண்டதாகவும் கூறப்படுகி றது.
இந்நிலையில், நேற்று சென்னை திரும்பிய ரஜினி, நாளை முதல் சென்னையில் நடைபெறும் ‘காலா’ படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளார். கடந்த மே மாதத்தில் ரஜினி, முதல்கட்டமாக ரசிகர்களை சந்தித்து, புகைப்படம் எடுத்துக்கொண்டதைப் போல, 2-ம் கட்ட ரசிகர்கள் சந்திப்பும், இப்படப்பிடிப்புக்கு பிறகு நடைபெறும் என்று கூறப்படுகிறது.