

'சாஹோ' படத்தைத் தொடர்ந்து பிரபாஸ் நடிக்கவுள்ள படத்தை இயக்க பிரபுதேவாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
'பாகுபலி 2' படத்தைத் தொடர்ந்து 'சாஹோ' படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என 3 மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது. சுஜீத் இயக்கி வரும் இப்படத்தை வம்சி மற்றும் பிரமோத் இருவரும் இணைந்து தயாரிக்கவுள்ளார்கள்.
இப்படத்தைத் தொடர்ந்து பிரபுதேவா இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் பிரபாஸை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். தெலுங்கு மற்றும் இந்தி என இருமொழிகளில் இப்படம் தயாராகும் என தெரிகிறது.
தற்போது 'கறுப்பு ராஜா வெள்ளை ராஜா' படப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் பிரபுதேவா, அப்பணிகள் முடித்தவுடன் பிரபாஸ் படத்தை இயக்குவார் என தெரிகிறது. 'சாஹோ' மற்றும் 'கறுப்பு ராஜா வெள்ளை ராஜா' பணிகள் முடிந்தவுடன் இருவரின் இணைப்பில் உருவாகும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்தார்கள்.
பிரபுதேவா இயக்கத்தில் உருவான தெலுங்கு படமான 'பெளர்ணமி'யில் நாயகனாக பிரபாஸ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.