

நான் நல்ல நடிகன் என்பதை ஒப்புக் கொள்ளவே மாட்டார் பாரதிராஜா என்று ரஜினிகாந்த் பேசினார்.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா, 'பாரதிராஜா பன்னாட்டு திரைப்பட பயிற்சி நிறுவனம்' ஒன்றை சென்னையில் துவங்கியுள்ளார். இதனை ரஜினி, கமல் திறந்து வைத்தார்கள்.
இவ்விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ், பார்த்திபன், கே.எஸ்.ரவிகுமார், ஆர்.கே.செல்வமணி, ராம், சேரன், சமுத்திரக்கனி, நடிகைகள் ராதா, அம்பிகா, ரேகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள்.
இவ்விழாவில் ரஜினி பேசுகையில், "நான் முதலில் பாரதிராஜாவை 'பாரதி' என்று அழைத்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் இளையராஜா சார், பாரதிராஜாவின் வயதைத் தெரிவித்தார். அதற்குப் பிறகு தான் 'பாரதி சார்' என்று அழைக்க ஆரம்பித்தேன். அவருடைய உண்மையான வயதைத் தெரிந்துக் கொண்டால், கையெடுத்து கும்பிடும், அனைவரும் சாஷ்டாங்கமாக காலில் விழுந்து விடுவார்கள்.
எப்படி இன்னும் இளமையோடு இருக்கிறார் என்றால் அதற்கு 2 காரணங்கள். ஒன்று அவர் பிறந்து வளர்ந்த மண் மற்றும் அதில் விளைந்ததை அவர்களுடைய அம்மா உருவாக்கி கொடுத்த சோறு. இரண்டாவது அவர் சுவாசிப்பது, இஷ்டப்படுவது, ஜீவிக்கிறது என அனைத்துமே சினிமா தான். இன்னும் அந்த சினிமாவை நேசிக்கிறார். அதுதான் அவருடைய இளமையின் ரகசியம்.
வாழ்க்கையில் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைத்தால், இளமையில் கடுமையாக உழைக்க வேண்டும். முதுமையில் ஆரோக்கியமாக வேண்டும் என்றால் எப்போதுமே பிஸியாக இருக்க வேண்டும். பாரதிராஜா இப்போதும் பிஸியாக இருக்கிறார். அவருக்கு பிடித்த சினிமாத் துறையில் ஏதாவது ஒரு வேலையை செய்துக் கொண்டே இருக்கிறார்.
பாரதிராஜா சாரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருக்கு என்னைப் பிடிக்கும், ஆனால் பிடிக்காது. அவர் அளித்த பழைய பேட்டிகள் எல்லாம் கிடைக்கும், அதை பாருங்கள். "ரஜினியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என்று கேட்டால் "நல்ல மனிதர்" என்று சொல்லியிருப்பார். நடிகராக என்ற கேள்விக்கும் " நல்ல மனிதன்" என்று தான் சொல்லியிருப்பார். நல்ல நடிகன் என்பதை ஒப்புக் கொள்ளவே மாட்டார். "எப்படி உன்னை ஏற்றுக் கொண்டார்கள்" என்று எப்போதுமே கேட்பார்.
இதுவரை இரண்டு முறை தான் எனது நேரத்தைக் கேட்டுள்ளார். '16 வயதினிலே' படத்துக்காக என்னுடைய தேதிகள் கேட்டு வந்திருந்தார். அவர் தயாரித்த 'கொடி பறக்குது' படத்துக்குக் கூட எனது தேதிகள் கேட்க பஞ்சு சாரைத் தான் அனுப்பி வைத்தார். இரண்டாவது முறை இந்த நிறுவனத்தை திறந்து வைக்க வேண்டும் என்று கேட்டார். கண்டிப்பாக வருகிறேன் என்று சொன்னேன்.
திரைப்படக் கல்லூரியில் படித்துள்ளேன். அங்கு படித்ததை விட கே.பாலசந்தார் சார் உள்ளிட்ட இயக்குநர்களிடம் தான் கற்றுக் கொண்டது அதிகம். திரைப்படக் கல்லூரியில் படித்திருப்பதால், அங்கு படிப்பது எவ்வளவு உபயோகமாக இருக்கும் என்பது எனக்கு தெரியும். பாரதிராஜா சொல்லி இவ்வளவு திரையுலகினர் வந்திருக்கிறார்கள். ஏனென்றால் அவரை விரும்பாத ஆளே கிடையாது.
எம்.ஜி.ஆர் சாருக்கு ஏதாவது பிரச்சினை என்றால் "பாரதிராஜாவை கூப்பிடு" என்று அழைத்து மணிக்கணக்காக பேசிக் கொண்டிருப்பார். கே.பாலசந்தர் சாரிடம் அவ்வளவு கொஞ்சிப் பேசுவார். பாரதிராஜாவிடம் இருக்கும் அன்பு முரட்டுத்தனமானது. அதனால் தான் அனைவருமே இங்கு வந்துள்ளார்கள்.
பாரதிராஜாவே ஒரு பல்கலைக்கழகம். அவருடைய படத்தில் நடித்தால் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருமே அனைத்தையும் கற்றுக் கொள்ளலாம். இப்போது தான் அதை அதிகாரப்பூர்வக் கல்லூரியாக திறந்துள்ளார். இது அவர் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய சாதனை. எடிட்டிங் உள்ளிட்ட தொழில்நுட்ப விஷயங்கள் அனைத்துமே எனக்கு தெரியாது, கமலுக்குத் தான் தெரியும்.
பாரதிராஜாவின் இந்த திரைப்பட கல்லூரி முயற்சி மிகப்பெரிய வெற்றி பெறும்" என்று பேசினார் ரஜினி.