

தனுஷ் இயக்கிவரும் 'பவர் பாண்டி' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14-ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தில் கவனம் செலுத்தி வந்தார் தனுஷ். மேலும், 'பவர் பாண்டி' படத்தின் நிலைமை என்ன என்பது தெரியாமல் இருந்தது.
தனுஷ் இயக்குநராக அறிமுகமாகவுள்ள படம் 'பவர் பாண்டி'. ராஜ்கிரண் நாயகனாக நடித்து வரும் இப்படத்தில் தனுஷ், மடோனா செபஸ்டியன், பிரசன்னா, சாயா சிங் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இயக்குநர் கவுதம் மேனன், 'விஜய் டிவி' திவ்யதர்ஷினி, வித்யூலேகா ஆகியோர் கவுரவ தோற்றத்திலும் நடித்துள்ளனர்.
வுண்டர்பார் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் கதைக்களம் அதிரடி சண்டைக் காட்சி கலைஞர் (ஸ்டண்ட்மேன்) ஒருவரைப் பற்றிய கதையாகும். ஒரே கட்டமாக மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டது. ஆனால், 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தில் தனுஷ் கவனம் செலுத்த தொடங்கியதால் 'பவர் பாண்டி' இறுதிகட்ட படப்பிடிப்பு எப்போது என்ற கேள்வி எழுந்துவந்தது.
இந்நிலையில் 'பவர் பாண்டி' படத்தின் இறுதி 5 நாட்கள் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. படம் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகும் என்று தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.