

பழம்பெரும் இந்தி நடிகரும் பாஜக எம்.பி.யுமான வினோத் கண்ணா காலமானார். அவரது மறைவுக்கு ரஜினி இரங்கல் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாகவே உடல் நலக் குறைவு காரணமாக வினோத் கண்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தீவிர நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டிருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர். அவருக்கு புற்றுநோய் பாதிப்பும் இருந்தது. இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) காலை அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.
ரஜினிக்கு மிகவும் நெருங்கிய நண்பராக இருந்தவர் வினோத் கண்ணா. அவருடைய மறைவுக்கு ரஜினிகாந்த் "எனது இனிய நண்பர் வினோத் கண்ணா. நீங்கள் இல்லாத வெறுமை எங்களை வாட்டும். தங்கள் ஆன்மா சாந்தியடையட்டும். தங்கள் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
வினோத் கண்ணாவின் மறைவுக்கு இந்தி திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் தங்களுடைய இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள்.