ரஜினி பற்றிய கருத்தால் சர்ச்சை: சரத்குமார் விளக்கம்

ரஜினி பற்றிய கருத்தால் சர்ச்சை: சரத்குமார் விளக்கம்
Updated on
2 min read

ரஜினியைப் பற்றி சரத்குமார் கூறிய கருத்தால் பெரும் சர்ச்சை உண்டானது. இதனைத் தொடர்ந்து, சரத்குமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

துக்ளக் விழாவில் ரஜினி கலந்து கொண்டு, தமிழ்நாட்டில் அசாதாரண சூழல் நிலவுவதாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் சரத்குமார். அவரிடம் "ரஜினியின் கருத்துக்கு உங்களுடைய பதில் என்ன?" என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு சரத்குமார், "ரஜினி ஒரு சிறந்த மனிதர். மிகப்பெரிய சூப்பர் ஸ்டார். அதனை நான் ஒத்துக் கொள்கிறேன். கருத்துகள் சொல்லும் போது எப்போது தேவைப்படுகிறதோ அப்போது மட்டும் சொல்லிவிட்டு, மற்ற நேரங்களில் அமைதியாக இருப்பதை கருத்துக்களாக ஏற்றுக் கொள்ள முடியாது. ரஜினி கூறியிருப்பது போன்று தமிழகத்தில் அசாதாரண சூழல் இல்லை.

என்னைப் பொறுத்தவரை மாநில விதிகளுக்கு உட்பட்டு, அங்கிருக்கும் தமிழ் கலாச்சாரம் மற்றும் உணர்வுகளுக்கு உட்பட்டு இருப்பவர்கள் மட்டும் தான் இருக்க வேண்டும். அந்த உணர்வை மதிக்கத் தெரிந்தவர்கள் மட்டும் தான் கருத்து சொல்ல வேண்டும். தேவைப்படும் போது கர்நாடகாவில் வேறொரு கருத்து சொல்வது, இங்கு வேறொரு கருத்து சொல்வது என இருக்கக் கூடாது. நாளை ரஜினிகாந்த் அவர்கள் கட்சி ஆரம்பித்து, முதலமைச்சராகப் போகிறேன் என்று கூறினால் அதை எதிர்க்கும் முதல் ஆளாக நான் இருப்பேன். அதில் சந்தேகம் வேண்டாம்" என்று தெரிவித்தார்.

சரத்குமாரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஜினி ரசிகர்கள் பலரும் அவருடைய புகைப்படங்களை எரித்தார்கள். சமூக வலைத்தளத்திலும் சரத்குமாரின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு வசைபாடத் தொடங்கினார்கள்.

இதைத் தொடர்ந்து சரத்குமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் "பத்திரிகையாளர் சந்திப்பில் விவசாய சகோதரர்களின் வேதனை, மாநில அரசு நிவாரணம், மத்திய அரசு ஆய்வு, நிவாரணம், எதிர் கொள்ளவுள்ள தண்ணீர் தட்டுப்பாடு அதற்கு திட்டம், இறுதியாக கேட்கப்பட்ட கேள்வி மறைந்த சோ அவர்களின் நினைவு விழாவில் ரஜினியின் கருத்தான அசாதாரண நிலைமை என்ற கருத்தை பற்றி என் கருத்து என்ன என்று வினவினர்.

அதற்கு ஏன் அப்படி குறிப்பிட்டார் என்று அவரைத்தான் கேட்க வேண்டும் என்று தெரிவித்தேன். பிறகு தமிழகத்தை தமிழன் தான் என்றும் ஆள வேண்டும் என்ற என் கருத்திற்கு பத்திரிகை சகோதரர்கள் "ரஜினி கட்சி ஆரம்பித்தால் என்ன செய்வீர்கள்" என்று கேட்டனர்.

அதற்கு நான் ரஜினி இனியவர் என் நண்பர். ஆனால் கட்சி துவங்கினார் எதிர்ப்பேன் என்று என் கருத்தை தெரிவித்தேன். பத்திரிகையாளர் சந்திப்பிற்கு வராத இணையதளத்தில் மிகைப்படுத்தி ரஜினி கட்சி துவங்க தகுதியற்றவர் என்று நான் சொன்னதாக செய்தி வெளியிட்டிருப்பது உண்மைக்கு புறம்பானது.

எதையும் சந்திக்க தயாரானவன் நான் என்பதை வலியுறுத்துகின்ற அதே நேரத்தில் தகாத செயல்களில் ஈடுபடுவர்களை என் சமத்துவ தமிழ் நெஞ்சங்கள் பொறுமையுடன் காவல்துறை உதவியுடனும் எதிர்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார் சரத்குமார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in