ஜல்லிக்கட்டு தடை சட்டத்தை உடனே நீக்குக: சிவகுமார்

ஜல்லிக்கட்டு தடை சட்டத்தை உடனே நீக்குக: சிவகுமார்
Updated on
1 min read

ஜல்லிக்கட்டு தடை சட்டத்தை உடனே நீக்க வேண்டும் என்று நடிகர் சிவகுமார் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் பல்வேறு ஊர்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இளைஞர்கள் பலரும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு வருகிறார்கள்.

இளைஞர்கள் ஒன்றுகூடி நடத்தப்பட்டு வரும் இப்போராட்டத்துக்கு திரையுலகினர் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடத்தப்பட்டு வரும் இப்போராட்டத்துக்கு சிவகுமார் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சிவகுமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பது:

"கம்பீரத்துக்கும், அழகுக்கும் பெயர் பெற்ற காங்கேயம் காளைகள். நாட்டு மாடுகள்,தமிழ்ப் பண்பாட்டின் அடையாளம். குழந்தைகளைப் போல் அன்பு காட்டி அவற்றை வளர்த்து,பராமரித்து 2500 ஆண்டுகளுக்கும் மேலாக, மாடு பிடிக்கும் விளையாட்டு, தமிழ் மண்ணில் நடந்து வருகிறது.

ஸ்பெயினில் மாடு பிடிப்பதென்பது விளையாட்டின் இறுதியில், மாட்டின் முதுகில் கத்திகளைச்சொருகி, நாக்கை வெளியே தள்ளியவாறு, அந்த மாடு கீழே விழுந்து இறந்தபின், அதை எடுத்துச் சென்று உணவாக்குவது.

தமிழகத்தில் மாட்டை அப்படி யாராவது கொல்வதைப் பார்த்திருக்கிறீர்களா? வெளிநாட்டு மாடு இனத்தை இந்தியாவில் திணிக்கும் சதியே இந்த 'பீட்டா' சட்டம். உண்மையிலேயே விலங்கினத்தை பாதுகாக்க இந்தச் சட்டம் இயற்றப்பட்டதென்றால், ஆங்கிலேயர் காலத்தில் துவங்கி, இன்றும், தினம், லட்சக்கணக்கான மாடுகளை, ஈவு இரக்கமின்றி கொன்று, அதன் இறைச்சிகளை, வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதில் இந்தியா முதலிடம் வகிக்கிறது என்பது, 'கோமாதா நம் குல மாதா'என்று பசுவைக் கும்பிடும் பாஜக அரசுக்கு தெரியாதா? பசு வதைத் தடைச்சட்டம் இதற்குப் பொருந்தாதா?

சீறும் சிங்கங்களாக தமிழகமெங்கும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் எழுச்சியுடன் போராடுகிறார்கள். மக்கள் நலனுக்காகவே சட்டம் . நீதிமன்றம் இதைப் புரிந்து கொண்டு ஜல்லிக்கட்டு தடைச்சட்டத்தை உடனே நீக்க வேண்டும்" என்று சிவகுமார் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in