

ரஜினி - ராஜமெளலி பற்றிய தனது ஃபேஸ்புக் பதிவிற்கு, ரசிகர் ஒருவரின் கருத்துக்கு அல்போன்ஸ் புத்திரன் அளித்த பதில் வைரலாக பரவி வருகிறது.
இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்போடு, ஏப்ரல் 28-ம் தேதி வெளியான படம் 'பாகுபலி 2'. விமர்சன ரீதியாகவும், மக்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பெரும் வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது 'பாகுபலி 2'.
'பாகுபலி 2' படத்துக்கு இந்திய திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்தை தெரிவித்துள்ளார்கள். மலையாளத் திரையுலகின் முன்னணி இயக்குநராக அல்போன்ஸ் புத்திரன் தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில், "ரஜினியை வைத்து ராஜமெளலி ஒரு படம் இயக்குவார் என நம்புகிறேன். அப்படி நடைபெற்றால், 'அவதார்' படத்தின் உலகளாவிய வசூல் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அல்போன்ஸ் புத்திரனின் ஃபேஸ்புக் பதிவிற்கு "உங்கள் தகவலுக்கு, அவதார் ரூ.17,000 கோடி ரூபாயை வசூல் செய்தது. அர்த்தமில்லாத பதிவு இது. உங்கள் கணக்கு கபாலி கான் ரசிகர்களால் களவாடப்பட்டுவிட்டது என நினைக்கிறேன்" என்று ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.
அவருக்கு பதிலளிக்கும் விதமாக "நான் ரஜினிகாந்தின் ரசிகன், அது எனது ஆசை மட்டுமே சகோதரா. நான் இன்னொரு தேசத்தைச் சேர்ந்தவன் என ஏன் நினைக்கிறீர்கள்? நாம் ஏன் நமது ஆசைகளை பகிர முயற்ச்சிக்கக் கூடாது? செல்போன் கண்டுபிடிப்பதற்கு முன்னால் வயர்கள் இன்றி பேச முடியும் என நினைத்துப் பார்த்திருப்பீர்களா? நமது மனதில் இல்லையென்றாலும் சில விஷயங்கள் நடக்கும். நம்பிக்கையே என்னை முன்னெடுத்துச் செல்கிறது. தர்க்கங்கள் அல்ல.
நான் எப்படி இயக்குநராவது என உட்கார்ந்து யோசிக்க ஆரம்பித்தால் அது 90 சதவிதம் தவறான தர்க்கமாகவே இருந்திருக்கும். ஆனால் 10 வருடங்கள் கடினாக உழைத்த பின், எனது நம்பிக்கை மற்றும் போராட்டத்தின் பலனாக எனக்கு முதல் படம் கிடைத்தது. எனது குடும்பம் எனக்கு உதவியது. அவ்வளவுதான். ஆனால் அவர்கள் துறையைச் சேர்ந்தவர்கள் அல்ல.
எனக்கு நம்பிக்கை தந்தார்கள், பணம் தந்தார்கள். எனவே, நம்பிக்கையும், நேரமும் கிடைத்தால் நீங்கள் நினைக்கும் நிலையை அடைய முடியும். தர்க்க ரீதியில் யோசித்தால் அல்ல. அப்படி யோசித்திருந்தால் சில வருடங்களுக்கு முன்னால் தங்க ஒரு வீடு இல்லாத, பைக் இல்லாத, துறையில் யாருடைய சிபாரிசும் இல்லாத, போதிய பணமில்லாத நான் இயக்குநராக யோசித்திருக்க முடியுமா?
ரஜினிகாந்தின் வாழ்க்கையையே எடுத்துக் கொள்ளுங்கள். பேருந்து நடத்துநராக இருந்தார். ஆனால் ரோபோ வெளியீட்டுக்கு முன்னால் இந்தியா முழுவதும் அனைத்து நாளிதழ்களிலும் அவரது புகைப்படம் வந்தது. எனவே தர்க்கத்தை விட ஹீரோயிஸத்தை நான் நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார் அல்போன்ஸ் புத்திரன்.
அல்போன்ஸ் புத்திரனின் இந்தப் பதிவு, ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.