

பெரிய நிறுவனங்கள் யாவும் என்னை அழைத்து வாய்ப்பு கொடுக்கவுமில்லை. அதற்கு தகுதியாக நானும் நடந்து கொள்ளவில்லை என்று இயக்குநர் அமீர் தெரிவித்தார்.
எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, மஞ்சிமா மோகன், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'சத்ரியன்'. யுவன் இசையமைத்திருக்கும் இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. தயாரிப்பாளர் சங்கத்தினர் மற்றும் அமீர் இணைந்து இசையை வெளியிட படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர். இவ்விழாவில் அமீர் பேசியது "'ஆதிபகவன்' ஆரம்பிப்பதற்கு முன்பு பிரபு சார் தொலைபேசியில் அழைத்தார். பையன் தயாராகிவிட்டான், எப்போது அழைத்து வரட்டும் என்றார். அப்போது தான் அவருக்கு அவ்வளவு பெரிய பையன் இருக்கிறான் என்றே தெரியும். அப்போது "மன்னிக்க வேண்டும். நான் ஏற்கனவே ஒரு படம் இயக்க ஒப்பந்தமாகி முன்பணம் வாங்கிவிட்டேன். நீங்கள் கேட்டதே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றேன்.
அப்போது ஒரு நாள், இயக்குநர்கள் சங்க அலுவலகத்தில் இருக்கும் போது, பிரபு சாலமன் "யானையை முக்கியமாக வைத்து கதை எழுதியுள்ளேன். யானையோடு நிற்பது போல ஒரு நாயகன் வேண்டும். என்ன செய்வது என தெரியவில்லை" என்றார். பிரபு எனக்கு ஏற்கனவே புகைப்படங்கள் அனுப்பிவிட்டார். "யானையை கட்டுப்படுத்துவது போல ஒருவனைப் பார்த்தேன்" என விக்ரம் பிரபுவைப் பற்றி பிரபுசாலமனிடம் தெரிவித்தேன். அப்படித்தான் 'கும்கி'யில் அறிமுகமாகி இன்று பெரிய நடிகராக வளர்ந்துள்ளார்.
சிவாஜிக்கு சண்டைக் காட்சிகள், நடனம் வராது. ஆனால், அது இரண்டையும் பிரபு செய்வார். விக்ரம் பிரபுவிடம் ஒரு நல்ல ஆக்ஷன் ஹீரோவுக்கான இமேஜ் தெரிகிறது. 'சத்ரியன்' படக்குழுவினர் பலரையும் எனக்கு தெரியும்.
எனது முதல் படத்திலிருந்தே யுவனுடன் பணியாற்றி வருகிறேன். இளையராஜாவுடன் பணியாற்றுவது தான் எனது கனவு. இளையராஜா, பி.சி.ஸ்ரீராம், கமல் மூவருடன் பணியாற்ற வேண்டும் என்பது என் ஆசை. இந்த மூவருடன் பணியாற்ற வாய்ப்பு வந்த போது நான் தான் தவிர்த்துள்ளேன். காரணம் என்னவென்றால் எப்படி அவர்களிடம் போய் திருத்தம் சொல்வது என்ற பயம் உள்ளது.
'ராம்' படத்தில் 'ஆராரிரோ' பாடலை யேசுதாஸை பாட வைத்தோம். அப்போது "நீங்கள் நிறைய திருத்தம் சொல்லுவீர்கள். என்னால் யேசுதாஸிடம் போய் சொல்ல முடியாது" என யுவன் போய்விட்டார். யேசுதாஸ்பாடும் போது, இப்படி வேண்டும் என்று சொன்ன போது கண்ணை மூடிக் கொண்டு நின்று கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் "தம்பி பாடிக்காட்டு" என்று யேசுதாஸ் கேட்க நானும் பாடிக் காட்டினேன். அப்பாடல் முடிந்தவுடன், நல்லாத்தான்யா இருக்கு என்றார் யேசுதாஸ்.
அதே போல் 'அறியாத வயசு' பாடல் பதிவின் போது நின்றுக் கொண்டிருந்தேன். அவர் பாடி முடித்துவிட்டார். எனக்கு மாற்றம் வேண்டும் என தோன்றுகிறது. ஆனால் எப்படிச் சொல்வது என தெரியாமல் முழித்தேன். யுவனும் அந்த இடத்தில் இல்லை. உடனே இரண்டாம் பல்லவியில் கொஞ்சம் மாற்றம் வேண்டும் என்று சொன்னேன். மாற்றம் பாடிவிட்டு "நல்லாவா இருக்கு" என்று கேட்டார்.
மூத்தவர்களை மதிக்கத் தெரியாமல் இல்லை. எப்படி அணுகுவது என்பது வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஏனென்றால் அவர்கள் எல்லாம் திறமையாளர்களாக இருக்கிறார்கள். "நீங்கள் ஒரு அகராதியாக இருக்கிறீர்கள். அதை திருத்தினால் நன்றாக இருக்காது" என்று 'படம் செய்யலாம்' என கமல் கேட்கும் போது சொன்னேன்.
ஆரம்பகால கட்டத்தில் இருந்த சினிமா, கொஞ்சம் கொஞ்சமாக மாறி தயாரிப்பாளர்கள் கையில் வந்தது. பெரிய நிறுவனங்கள் யாவும் என்னை அழைத்து வாய்ப்பு கொடுக்கவுமில்லை. அதற்கு தகுதியாக நானும் நடந்து கொள்ளவில்லை. இயக்குநர் பிரபாகரன் பேச்சில் முதலில் தயாரிப்பாளருக்கு நன்றி சொன்னார். அப்படி சொல்லும் இயக்குநர்கள் மிகவும் குறைவு" என்று பேசினார் இயக்குநர் அமீர்.