Published : 23 Feb 2014 12:00 AM
Last Updated : 23 Feb 2014 12:00 AM

ஆஹா கல்யாணம்: திரை விமர்சனம்- இந்து டாக்கீஸ் குழு

இந்தியில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் ‘பேண்ட் பஜா பாராத்’. இதன் ரீமேக், ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழியில் தயாரிக்கப்பட்டு இப்போது வெளிவந்திருக்கிறது.

தமிழ் வடிவத்திற்குப் பெயர்தான் ‘ஆஹா கல்யாணம்’. பிஸினஸ் பார்ட்னர்களான சக்திவேலுக்கும் (நானி) ஸ்ருதிக்கும் (வாணி கபூர்) நடக்கும் காதலை பல வண்ணங்களில் சொல்கிறது படம்.

படத்தின் தொடக்கமே வண்ணமயமான ஒரு வட இந்தியக் கல்யாணத்தில் விரிகிறது. நாயகி ஸ்ருதி கல்லூரி இறுதியாண்டு மாணவி. எமோஷனலுக்கு இடம் கொடுக்காத ப்ராக்டிகலானவள். பகுதி நேரமாக கல்யாணக் கான்ட்ராக்டில் வேலைசெய்கிறார். அந்தத் தொழிலில் பெரிய ஆளாக வேண்டும் என்பது அவரது கனவாக இருக்கிறது. நாயகன் சக்திவேல் எல்லா சினிமா இளைஞர்களையும்போல் எந்த இலக்கும் இல்லாமல் இருக்கிறார். முதலில் ஸ்ருதியின் நட்பைப் பெற வேண்டும் என்பதற்காக அவருடன் தொழிலில் பார்ட்னராகச் சேர்த்துக்கொள்ள வேண்டுகிறார். முதலில் எதிர்த்தாலும், ஒரு வழியாகச் சேர்த்துக்கொள்கிறார்.

முதலில் இருவரும் இணைந்து அந்தத் தொழில் மிகப் பிரபலமாக இருக்கும் சந்திரலேகாவிடம் (சிம்ரன்) வேலைக்குச் சேர்ந்து தொழில் கற்றுக் கொள்ள நினைக்கிறார்கள். ஆனால் அங்கு அவர்களுக்கும் சந்திரலேகாவுக்கும் இடையே தொழில் ரீதியாக முரண்பாடு ஏற்பட்டு வெளியேறி உடனடியாகத் தங்கள் நிறுவனத்தைத் தொடங்குகிறார்கள். மினிபட்ஜெட்டில் அமர்க்களமாகக் கல்யாணம் நடத்தி அசத்திவிடுகிறார்கள். இதனால் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் அவர்கள் நிறுவனமான ‘கெட்டி மேள’த்தைத் தேடி வருகிறார்கள். லட்சம் லட்சமாகச் சம்பாதிக்கிறார்கள்.

இதுவரைக்கும் ஸ்ருதி, இந்த உறவை நட்பானதாகவே கருதுகிறார். ஆனால் சக்திக்குக் காதல் இருக்கிறது. இதற்கிடையில் தொடர்ந்து கல்யாண ஆர்டர்கள் கிடைத்துவர, ஒரு வெற்றிக் கொண்டாட்டத்திற்குப் பிறகு இரவு தனியாக இருக்க நேரிடும்போது இருவருக்கும் இடையிலான உறவு உடல்ரீதியானதாக மாறிவிடுகிறது. இந்த இடத்தில் ஸ்ருதிக்கு, சக்தி மீது காதல் வந்துவிடுகிறது. ஆனால் இப்போது சக்தி ஏனோ தடுமாறுகிறான். இதனால் இருவருக்கும் இடையிலான உறவில் விரிசல் உண்டாகிறது. இருவரும் தனித்தனியே பிரிந்து தொழில் போட்டி செய்யும் அளவுக்கு அந்த விரிசல் வளர்ந்துவிடுகிறது. ஆனால் இருவருக்குமே தொழில் சொதப்புகிறது. நஷ்டம் ஏற்படுகிறது. கடன்காரர்கள் இருவரையும் துரத்துகிறார்கள்.

இந்தச் சமயத்தில் ஒரு பெரிய பணக்காரர் ‘கெட்டி மேள’த்திற்கு ஆர்டர் தர முன்வருகிறார். ஆனால் ஸ்ருதி, சக்தி இணைந்து செயல்பட்டால்தான் தருவேன் என ஒரு நிபந்தனை வைக்கிறார். நண்பர்கள் வற்புறுத்தல் காரணமாகவும், பணத்திற்காகவும் இருவரும் இணைந்து வேலைசெய்ய சம்மதிக்கிறார்கள். ஆனால் இதற்கிடையிலேயே ஸ்ருதிக்கு வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தமும் முடிந்துவிடுகிறது. அவர்களைக் கடனில் இருந்து மீட்க இந்தக் கல்யாண ஆர்டர் முக்கியத் தேவையாக இருக்கின்றது. இந்தத் தடங்கலை முறியடித்தார்களா? இருவருக்குமான காதல் என்ன ஆனது? என்பதுதான் யூகிக்கக்கூடிய மீதிக் கதை.

‘நான் ஈ’ படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்குப் பரிச்சயமான நானிக்கு இந்தப் படத்திலும் அதுபோன்ற ஒரு வேடம்தான். நன்றாகவே நடித்திருக்கிறார். ஆனால் அவர் தமிழில் பேசாமல் இருந்தால் எல்லாவற்றையும் மன்னித்துவிடலாம். ஸ்ருதியாக வரும் வாணி கபூர் அசல் வட இந்திய அழகு. பாடல் காட்சிகளில் கூடுதல் அழகுடன் இருக்கிறார். திரைக் கதையும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. ஆனால் பார்வையார்கள் நினைப்பதெல்லாம் அடுத்த அடுத்த காட்சிகளில் நடந்துவிடுகிறது.

தருணின் இசையில் அமைந்த தாமரையின் வரிகள் ‘மழையில் நனையத் தோன்றுதே’ பாடல் நினைவில் பதிந்துவிடுகிறது. லோகனாதன் னிவாசனின் ஒளிப்பதிவு படத்தின் கல்யாணங்களையெல்லாம் திருவிழாக் கொண்டாட்டங்களாக்குகிறது. அறிமுக இயக்குநரான கோகுல் கிருஷ்ணாவுக்கு இந்த ரீமேக் படம் சவால்தான். அவர் முயற்சியைப் பாராட்டலாம். இந்தப் படத்தின் காட்சிகள் சென்னையில் நடக்கிறது. தமிழ் நடிகர்களும் ஆங்காங்கே வந்து செல்கிறார்கள். ஆனால் முழுமையான தமிழ்ப் படமாக ஆகவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x