

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 'லிங்கா' படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யு' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள்.
ரஜினி, அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'லிங்கா'. கே.எஸ்.ரவிகுமார் இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்திருக்கும் இப்படத்தின் அனைத்து உரிமைகளையும் ஈராஸ் நிறுவனம் வாங்கி இருக்கிறது.
படப்பிடிப்பு முடிந்து, இறுதி கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அனைவருமே டிசம்பர் 12ம் தேதி வெளியாகும் என்று கூறினாலும், இயக்குநர் ரவிகுமார் மட்டும் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. அப்பணிகள் முடிந்து, சென்சார் ஆனவுடன் தான் வெளியீட்டு தேதி கூறமுடியும் என்று தெரிவித்தார். இதனால், டிசம்பர் 12ம் தேதி வெளியாகுமா என்ற சந்தேகம் நிலவியது.
இந்நிலையில், 'லிங்கா' பணிகள் முடிந்து சென்சாருக்கு அனுப்பி இருக்கிறார்கள் என்ற தகவல் பரவியது. இது குறித்து படக்குழுவினர் யாருமே வாய் திறக்கவில்லை. நேற்று இரவு 'லிங்கா' படத்தின் சென்சார் பணிகள் அனைத்தும் முடிந்து 'யு' சான்றிதழ் கிடைத்தது.
இது குறித்து ஈராஸ் நிறுவனத்தின் தென்னிந்திய மேலாளர் செளந்தர்யா ரஜினிகாந்த், "'லிங்கா' சென்சார் பணிகள் முடிந்து, யு சான்றிதழ் கிடைத்திருக்கிறது. 12-12-14 அன்று வெளியாகும்" என்று தெரிவித்திருக்கிறார். இதனையே இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
'எந்திரன்' படத்திற்கு பிறகு ரஜினி நடிப்பில் வெளியாகும் படம் என்பதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 3000 திரையரங்குகளில் வெளியிட பணிகளைத் தொடங்கி இருக்கிறார்கள்.