

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் '2.0' தொலைக்காட்சி உரிமம் 110 கோடிக்கு விலை பெற்றுத் தந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரஜினி, அக்ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிக்க, ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் '2.0'. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். சுமார் ரூ.400 கோடி பொருட்செலவில் லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.
சென்னை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது பிரதான காட்சிகள் அனைத்துமே படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டது. இன்னும் ஒரே ஒரு பாடலும், சில காட்சிகள் மட்டுமே பாக்கியுள்ளதாக இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 14-ம் தேதி '2.0' படத்தின் டீஸரை வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளது. இந்தியா மட்டுமன்றி உலகளவில் தமிழ்ப் படங்களே வெளியாகாத நாடுகளிலும் இப்படத்தை தீபாவளிக்கு வெளியிட லைக்கா நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.
இந்நிலையில், இப்படத்தின் அனைத்து மொழி தொலைக்காட்சி உரிமைகளையும் இணைத்து ஜீ நிறுவனம் வாங்கியுள்ளது. 110 கோடிக்கு அனைத்து உரிமையையும் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், லைக்கா நிறுவனத்தின் ராஜூ மகாலிங்கம் "தொலைக்காட்சி உரிமம் ஜீ நிறுவனத்துடன் ஒப்பந்தமாகியுள்ளது" என தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.