

காமெடி வேடத்தில் நடித்த தர்புகா சிவா, 'கிடாரி' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாக இருக்கிறார்.
'வெற்றிவேல்' படத்தைத் தொடர்ந்து 'கிடாரி' படத்தில் நாயகனாக நடித்து தயாரித்து வருகிறார் இயக்குநர் சசிகுமார். நிகிலா விமல் நாயகியாக நடித்து வரும் இப்படத்தை புதுமுக இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கி வருகிறார்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்திருக்கிறது. ஒளிப்பதிவாளராக கதிர் பணியாற்றி வரும் இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது தெரியாமல் இருந்தது.
இந்நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளராக தர்புகா சிவா ஒப்பந்தமாகி இருக்கிறார். இது குறித்து சசிகுமார் "எனது தயாரிப்பில் இசையமைப்பாளர் தர்புகா சிவா அறிமுகமாகிறார். ’கிடாரி’ படத்துக்காக 7 பாடல்கள் அருமையா கொடுத்திருக்கார்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
'ராஜதந்திரம்' படத்தில் காமெடி வேடத்தில் நடித்து கவனம் ஈர்த்தவர் தர்புகா சிவா என்பது குறிப்பிடத்தக்கது.