ஐ-யில் என்னைவிட கடுமையாக உழைத்தவர் விக்ரம்தான்: ஷங்கர்

ஐ-யில் என்னைவிட கடுமையாக உழைத்தவர் விக்ரம்தான்: ஷங்கர்
Updated on
2 min read

'ஐ' படத்தில் தன்னைவிட நடிகர் விக்ரம்தான் கடுமையாக உழைத்தார் என்று இயக்குநர் ஷங்கர் கூறினார்.

ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கார்த்திக் கிரிஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'கப்பல்'. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.

ஷங்கர் தனது தயாரிப்பு நிறுவனமான எஸ் பிக்சர்ஸ் சார்பில் வெளியிடுவதால் ஏ.ஆர்.ரஹ்மான், விஜய், விக்ரம் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் பேசும்போது, "'ஐ' படத்தைப் பற்றி எதுவும் கேட்காதீர்கள். ஏனென்றால் இது 'கப்பல்' படத்தின் இசை வெளியீட்டு விழா. இயக்குநர் ஷங்கர் எனது குரு. அவருடைய கனவுலகில் பங்கேற்ற ஒரு அதிர்ஷ்டக்கார நடிகன் அவ்வளவு தான்.

'கப்பல்' படத்திற்கு A சான்றிதழ் அல்லது U/A சான்றிதழ் அல்ல, S சான்றிதழ் கிடைத்திருக்கிறது. இப்படத்திற்கு ஷங்கரின் S பிக்சர்ஸ் நிறுவனத்திடமிருந்து சான்றிதழ் கிடைத்திருக்கிறது. அவருக்கு ஒரு படம் பிடித்துவிட்டால், உலகிற்கு அப்படம் பிடித்துவிடும்" என்றார்.

இயக்குநர் ஷங்கர் பேசும்போது, "4 வருடங்கள் கழித்து மீண்டும் தயாரிப்பிற்கு வந்தது சந்தோஷமாக இருக்கிறது. 'கப்பல்' திரைப்படம் ஒரு காமெடி கலந்த காதல் கதையாகும். அப்படத்தை பார்த்த உடனே பிடித்துவிட்டது. காமெடியாகவும் அதே நேரத்தில் வித்தியாசமாகவும் இருந்தது. இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும். இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு வந்து சிறப்பித்த ஏ.ஆர்.ரஹ்மான், விஜய் மற்றும் விக்ரம் ஆகியோருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பயங்கர பிஸியாக இருக்கிறார். 'லிங்கா' படத்தின் பின்னணி இசைக் கோர்ப்பு பணிகள், இரானிய இயக்குநர் மஜித் இயக்கும் படம் என பிஸியாக இருந்த நேரத்திலும் எனக்காக வந்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது. அவருக்கு மிகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

விக்ரமுடைய உழைப்பை எந்த வார்த்தையில் சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. 'ஐ' படத்திற்காக மூன்று மொழிகளிலும் மாற்றி மாற்றி டப்பிங் பேசியிருக்கிறார். எனது வாழ்க்கையில் சந்தித்த ஒரு அற்புதமான மனிதர் விக்ரம். அவரை நான் மிஸ்டர் ஸ்டீல் என்று தான் அழைப்பேன்.

டப்பிங் கலைஞனாக 'காதலன்' படத்தில் பணியாற்றினார். 'ஐ' படத்தில் வரும் கூன் விழுந்திருக்கும் பாத்திரத்திற்கு அதிக சிரத்தை எடுத்து டப்பிங் பேசியிருக்கிறார். அவரது தொண்டையை மிகவும் டைட்டாக வைத்துக் கொண்டு, அப்பாத்திரத்திற்காக பேசினால் தான் சரியாக வரும். அப்படித்தான் பேசியிருக்கிறார்.

'அந்நியன்' படத்திற்கு பிறகு எனது குடும்பத்தில் ஒருவராகி விட்டார். எனது அழைப்பை ஏற்று, இந்த விழாவிற்கு வந்திருக்கிறார். என்னை விட, 'ஐ' படத்தில் கடுமையாக உழைத்தவர் விக்ரம். அவருக்காக அப்படம் வெற்றியாக வேண்டும்.

சிம்புதேவன் இயக்கத்தில் நடித்து வரும் படத்தில் விஜய் பிஸியாக நடித்து வருகிறார். அவருக்கு போன் செய்து, வரமுடியுமா என்று கேட்டேன். ஒ.கேனா என்று பதிலளித்தார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஒரு முறை தான் கேட்டேன், அதற்கே ஒ.கே என்று சொல்லி விட்டீர்களே என்றேன். அதற்கு, "என்னங்கண்ணா, நீங்கள் கேட்டீர்கள், நான் எப்படி வராமல் இருக்க முடியும்?" என்றார்.

'நண்பன்' காலத்தில் இருந்து எனக்கு நண்பனாகி விட்டார். முதல் நாள் 'நண்பன்' படப்பிடிப்பில் பெரிதாக எதுவும் பேசிக் கொள்ளவில்லை. ஆனால், அடுத்த இரண்டு நாட்களில் நெருங்கிய நண்பர்களாகி விட்டோம். அப்படத்திற்கு பிறகு பிரபுதேவா அளித்த பார்ட்டியில் விஜய்யை சந்தித்தேன். நீண்ட நேரம் காலேஜ் நண்பர்கள் மாதிரி பேசிக்கொண்டு இருந்தோம்.

'கப்பல்' திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. கண்டிப்பாக உங்கள் அனைவரையும் கவரும் என்று நம்புகிறேன்" என்றார் ஷங்கர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in