

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) தலைவராக திரைப்பட இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தேர்வாகியுள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பெப்சி அமைப்புக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் இசை, காஸ்டியூம், லைட்டிங் உள்ளிட்ட 23 திரைப்பட தொழிலாளர்கள் அமைப்பைச் சேர்ந்த தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட 69 பேர் வாக்குரிமை பெற்று தேர்தலில் ஓட்டு அளிக்க வேண்டும்.
2017 2019- ம் ஆண்டுகளுக்கான தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று சென்னையில் நடைபெற்றது. தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி பாலசுப்ரமணியன் பணியாற்றினார்.
இந்த தேர்தலில் தலைவராக இயக்குநர் ஆர்.கே.செல்வமணி 36 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து நின்ற இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார் 33 ஓட்டுகள் பெற்றார். செயலாளராக ஏ.சண்முகம், பொருளாளராக சுவாமிநாதன் வெற்றி பெற்றனர். இவர்களுடன் துணைத் தலைவர்கள் மற்றும் இணைச் செயலாளர்களும் வெற்றி பெற்று தேர்வாகியுள்ளனர். புதிய நிர்வாகிகளின் பதவி ஏற்பு விழா இன்று மாலை நடைபெறுகிறது.