

தம்பி கார்த்தியை வைத்து ஒரு படம் தயாரிப்பதற்காக சரியான கதை ஒன்றை தேடி வருகிறார் தயாரிப்பாளர் சூர்யா.
ஜோதிகா நடித்த '36 வயதினிலே' படத்தின் மூலமாக படத் தயாரிப்பில் இறங்கினார் சூர்யா. அதனைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கிய 'பசங்க 2' மற்றும் '24' ஆகிய படங்களைத் தயாரித்தார்.
தற்போது தயாரிப்பதற்காக பல்வேறு கதைகளை கேட்டு வருகிறது சூர்யாவின் 2டி தயாரிப்பு நிறுவனம். இதில் கார்த்தியை நாயகனாக வைத்து ஒரு படமும் அடங்கும். கார்த்தி நடிக்கும் படத்துக்காக பல்வேறு இயக்குநர்கள் கதைகளைத் தெரிவித்து வருகிறார்கள். விரைவில் இயக்குநர் யார் என்பது முடிவு செய்யப்பட இருக்கிறது.
'காஷ்மோரா' படப்பிடிப்பு முடிவுற்றதைத் தொடர்ந்து மணிரத்னம் படத்துக்காக தன்னை தயார் செய்து வருகிறார் கார்த்தி. மணிரத்னம் படத்தை முடித்துவிட்டு சூர்யா தயாரிக்கும் படத்தில் நடிப்பார் கார்த்தி என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.