

ஒரு படத்திற்கு தயாரிப்பாளர் மிக முக்கியமானவர் என்று கூறியுள்ளார் பிரபல தயாரிப்பாளர் சி.வி.குமார்.
'அட்ட கத்தி', 'பீட்சா', 'சூது கவ்வும்' என தொடர்ச்சியாக வித்தியாசமான கதைகளை தயாரித்து அதில் வெற்றியும் பெற்றுவருபவர் சி.வி.குமார். இவருடன் தற்போது ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனமும் இணைந்து படங்களைத் தயாரித்து வருகிறது.
கன்னடத்தில் தயாரிக்கப்பட்டு, பல்வேறு விருதுகளை குவித்துவரும் 'லுசியா' படத்தின் தமிழ், தெலுங்கு உரிமையை இவர் வாங்கியுள்ளார். அவ்வப்போது தனது தயாரிப்பு படங்களைப் பற்றிய செய்திகளை, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு வந்தார்.
“சினிமா திரையுலகில் இயக்குநர், ஒளிப்பதிவாளர், எடிட்டர், நடிகர், நடிகை என அனைவருமே ஒரு படம் வெற்றியடைந்தாலும், தோல்வியடைந்தாலும் பயன் பெறுகிறார்கள். படம் தோல்வியடைந்தால் தயாரிப்பாளர் மட்டுமே அதிகம் பாதிக்கப்படுகிறார். படத்திற்கான உழைப்பு மற்றும் அவர் முதலீடு செய்த பணம், இரண்டுமே வீணாகிறது.
தனி நபரின் கற்பனைகளுக்கு மதிப்பளித்து, அவரை நம்பி முதலீடு செய்வது தயாரிப்பாளர் தான். அவருக்கு மதிப்பளிக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் தான் நிறைய தயாரிப்பாளர்கள் புதிதாக வருவார்கள்.
படத்திற்கு கதை எழுதுவது என்பது சாதாரணமான வேலையல்ல. ஒரு தயாரிப்பாளர் அதை புரிந்துக் கொண்டு தயாரிப்பது என்பது அதை விட கடினமான வேலை. நான் ஒரு தயாரிப்பாளராக பெருமைப்படுகிறேனே தவிர முதலீட்டாளராக அல்ல.
ஒரு படம் ஜெயிக்கிறது, தோற்கிறது என்பதையும் தாண்டி தயாரிப்பாளருக்கு வாழ்த்து தெரிவியுங்கள். படம் நஷ்டப்பட்டாலும், உங்கள் வாழ்த்து அவர்களை சந்தோஷப்படுத்தும்.” என்று தனது பேஸ்ஃபுக் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.