

சேலத்தில் ரஜினி நடித்த 'கபாலி' சுமார் 3 கோடி நஷ்டம் ஏற்படுத்தியதாக விநியோகஸ்தர் நந்தா தெரிவித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டு காலமாக, திரைப்பட விநியோகத் துறை மரணப் படுக்கையில் கிடப்பதாகவும், அதற்கு நட்சத்திர நடிகர்களே காரணம் என்றும் பிரபல திரைப்பட விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் அடுக்கடுக்காக புலம்பியிருக்கிறார்.
இது தொடர்பாக திருப்பூர் சுப்ரமணியம் வெளியிட்ட ஆடியோ பதிவில் 'கபாலி' குறித்து, "'கபாலி' படத்துக்கு, தாணு, மகிழ்ச்சி என 200 நாள் வரை விளம்பரம் செய்துள்ளார். உங்கள் மனசாட்சிப்படி விளம்பரம் செய்யுங்கள். உண்மையிலேயே அந்தப் படம் 200 நாள் ஓடிய படமா? பொதுமக்களை வேண்டுமானால் இதன் மூலம் ஏமாற்றலாம். ஆனால் திரைத்துறையில் இருப்பவர்களுக்கு எல்லா உண்மைகளும் தெரியும். நான் சொன்ன இந்தப் படங்களில் ஒரு விநியோகஸ்தர் கூட சம்பாதிக்கவில்லை. அப்படி இருக்கும்போது எதை வைத்து வெற்றி என்று சொல்லுகிறீர்கள்?" என்று திருப்பூர் சுப்ரமணியம் கடுமையாக சாடியிருந்தார்.
திருப்பூர் சுப்ரமணியம் குற்றச்சாட்டுக்கு 'கபாலி' தயாரிப்பாளர் தாணு, "கபாலியின் வெற்றி குறித்து ஏற்கனவே நிறைய பேசிவிட்டேன். உங்களுக்கு சந்தேகம் என்றால், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் விவரங்களைத் தருகிறேன், அவர்களிடம் கேட்டறிந்து உண்மையைத் தெரிந்து கொள்ளலாம். அடுத்து, கபாலியைப் பொருத்த வரை, திருச்சி, செங்கல்பட்டு, மதுரை, திருநெல்வேலி என எங்கிருந்தும் யாரும் பிரச்சினையை எழுப்பவில்லை. திருப்பூர் சுப்பிரமணியம் மட்டுமே இப்படி பேசி வருகிறார். ஏன்? அவருக்கு நான் கோவை பகுதி வெளியீட்டு உரிமையை தரவில்லை. அதனால்தான் எனக்கெதிராக தவறான விஷயங்களைப் பேசி வருகிறார்" என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் 'கபாலி' படத்தில் சேலம் விநியோக உரிமையை வாங்கி வெளியிட்ட நந்தா, "'கபாலி' படத்தின் சேலம் விநியோகஸ்தர் நந்தா பேசுகிறேன். திருப்பூர் சுப்ரமணியம் அண்ணனுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கிட்டதட்ட 6 - 7 மாதமாக யாரிடம் போய் சொல்வது என்று இருந்த குமுறலை அவர் வெளிப்படையாக சொன்னதில் மகிழ்ச்சி.
சிலர் 'கபாலி' படம் 100 நாள் ஓடியது, 200 நாள் ஒடுகிறது எனச் சொல்கிறார்கள். மற்ற ஏரியாக்கள் பற்றி எனக்கு தெரியாது. சேலம் ஏரியாவை பற்றி மட்டும் சொல்கிறேன். எங்களுக்கு எம்.ஜி விநியோக அடிப்படையில் 6.40 கோடிக்கு கொடுத்தார்கள். விளம்பரங்கள், க்யூப் உள்ளிட்ட அனைத்துமே சேர்த்து 7 கோடி ரூபாய் ஆனது.
எங்களுக்கு 3.40 கோடி மட்டும் தான் பங்கு அடிப்படையில் வந்தது. 3.10 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டது. என்ன பண்றது எனத் தெரியாமல் முறையாக போய் கேட்டோம். அதற்கான விடை இப்போது வரை கிடைக்கவில்லை.
ஒரு படம் எவ்வளவு போகும் என்ற விலையை நிர்ணயம் செய்கிறார்கள், நாங்கள் புதிதாக வருவதால் எங்களுக்குத் தெரியாது. ரஜினி படங்களைப் பொறுத்தவரையில் முந்தைய படங்கள் எவ்வளவு வசூல், இப்போது வெளியாகியுள்ள டீஸர், விளம்பரங்களுக்கு என்ன சொல்கிறார்கள் உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு தான் வாங்கினோம். நாங்கள் ஏமாந்துவிட்டோம் என சொல்ல முடியாது, விலை சரிதானா என்பது எங்களுக்குத் தெரியாது. பெரிய நாயகர்களின் படங்கள் தொடர்ச்சியாக வருவதில்லை. அப்படங்கள் வெளியானால் மட்டுமே எவ்வளவு வசூல் என்பதை எல்லாம் கூற முடியும்.
ஒரு படம் நன்றாக போகிறது என்று நீங்களே விளம்பரப்படுத்திக் கொள்ளாதீர்கள். அது அடுத்தாக புதிதாக படம் தயாரிக்கக்கூடிய தயாரிப்பாளரையும் பாதிக்கும். 'கபாலி' 300 கோடி ரூபாய் வசூல் என சொல்கிறீர்கள் என்றால் அதை வைத்து ரஜினி சாரின் அடுத்த படத்தின் தயாரிப்பாளர் படத்தின் பட்ஜெட்டை நிர்ணயம் செய்வார். படம் முடிந்து விநியோகம் செய்யும் போது, புதிதாக வரும் தயாரிப்பாளரும் பாதிக்கப்படுவார். தயவு செய்து பொய்யாக மட்டும் விளம்பரப்படுத்தாதீர்கள். விநியோகஸ்தரிடம் எவ்வளவு வசூல் என்பதைக் கேளுங்கள்.
படத்தை எடுத்துவிட்டு, ஒவ்வொருத்தரும் என்ன செய்வது என முழித்து வருகிறார்கள். விநியோகஸ்தர்கள் ஒவ்வொருவரும் படத்தை வாங்கிவிட்டு எப்படி திணறி வருகிறார்கள் என்பது அனைவருக்குமே தெரியும்" என்று தெரிவித்துள்ளார் நந்தா.