

எப்போதுமே இயக்குநராக வேண்டும் என விரும்பியதில்லை என்று தயாரிப்பாளர் சி.வி.குமார் தெரிவித்தார்.
சி.வி.குமார் இயக்கத்தில் சந்தீப் கிஷன், லாவண்யா, டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'மாயவன்'. ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
'மாயவன்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சி.வி.குமார் பேசும் போது "எப்போதுமே இயக்குநராக வேண்டும் என்ற எண்ணம் இருந்ததே கிடையாது. வாழ்க்கையில் எனக்கென்று பெரிதாக எதுவும் லட்சியங்கள் வைத்துக் கொண்டதில்லை. நான் பல கதைகளை என்னிடம் பணியாற்றிய இயக்குநர்களோடு விவாதிப்பேன். அனைவருமே இக்கதையை நன்றாகவுள்ளதாக தெரிவித்தார்கள்.
நலன் குமாரசாமி தான் நீங்களே இயக்குங்கள் என்று சொன்னார். ஆனால், இயக்குநர் ரவி "நீங்கள் கதை எழுதி எங்களைப் போன்ற இயக்குநரிடம் கொடுத்துவிடுங்கள். நாங்கள் இயக்குகிறோம்" என்றார். அப்படியே பேசிப் பேசி இயக்குநராகி விட்டேன். எப்போது இயக்குநராக வேண்டும் என்ற முடிவு எடுத்தேன் எனத் தெரியவில்லை. இப்படம் இயக்குநராக நல்ல அனுபவம் கிடைத்தது.
இது போலீஸ் கதை அல்ல. தொடர் கொலைகளை கண்டுபிடிப்பது தான் களம். அதில் போலீஸ் அதிகாரிகள் இருப்பார்கள். தமிழ் சினிமாவில் ஒரு படத்தை ஒரே தயாரிப்பாளர் எடுத்து, முடித்து, வெளியிடுவது முடியாத சூழலாகிவிட்டது.
நாட்டில் போலீஸ், ராணுவம் என அனைத்தும் உள்ளது. ஆனால் திருட்டு நடைபெற்று தான் வருகிறது. பிரச்சினைகள் அனைத்து தளங்களிலும் இருக்கத் தான் செய்கிறது. ஞானவேல்ராஜா சார் - அபி இருவரும் மிகப்பெரிய அணியை சுமார் 40 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கியுள்ளார்கள்.
இன்னும் ஒரு மாதத்தில் இப்போது இருக்கும் அளவுக்கு திருட்டு விசிடி இருக்காது என்பதை உறுதியாக சொல்ல முடியும். புதிய நிர்வாகிகள் ஜெயித்ததிலிருந்து திருட்டு விசிடிக்காக மட்டுமே பணியாற்றி வருகிறார்கள்" என்று பேசினார் சி.வி.குமார்