

தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றிய தொழிலதிபருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என நடிகை ராதா தரப்பில் நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
‘சுந்தரா டிராவல்ஸ்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை ராதா, சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த தொழிலதிபர் பைசூல் என்பவருக்கு எதிராக காவல் துறையினரிடம் அண்மையில் புகார் அளித்தார்.
தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பல லட்ச ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு பைசூல் ஏமாற்றி விட்டதாகவும், தனது பணத்தைத் திருப்பித் தர அவர் மறுப்பதாகவும் அந்தப் புகாரில் கூறியிருந்தார்.
இந்தப் புகாரின் பேரில் வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் பைசூல் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு முதன்மை நீதிபதி ஆதிநாதன் முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, புகார்தாரரான ராதா நீதிமன்றத்துக்கு வந்திருந்தார். மோசடி செய்த பைசூலுக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என ராதாவின் வழக்கறிஞர் வாதிட்டார்.
இது தொடர்பாக காவல் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிபதி, மனு மீதான விசாரணையை டிசம்பர் 4-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.