

'மாநகரம்' படத்துக்கு காட்சிகள் மற்றும் வசூல் அதிகரித்து வருவதால் படக்குழு பெரும் மகிழ்ச்சியில் உள்ளது.
புதுமுக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சந்தீப் கிஷன், ஸ்ரீ மற்றும் ரெஜினா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'மாநகரம்'. ரியாஸ் இசையமைக்க, செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். மார்ச் 10-ம் தேதி இப்படம் வெளியானது.
விமர்சன ரீதியாக இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், குறைவான திரையரங்குகளில் வெளியானாலும், முதல் நாள் கூட்டமும் குறைவாக இருந்தது. பலரும் இப்படத்தை பாராட்டவே, திரையரங்குகளும் அதிகரிக்கப்பட்டு, கூட்டமும் அதிகரித்துள்ளது. இதனால் படக்குழு மிகவும் சந்தோஷத்தில் உள்ளது.
மாயாஜால் திரையரங்குகளில் முதல் 4 காட்சிகள் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து 6 காட்சிகள், 14 காட்சிகள் என அதிகரிக்கப்பட்டு தற்போது 18 காட்சிகள் திரையிடப்பட்டு வருகிறது.
மக்கள் மத்தியில் கிடைத்துள்ள வரவேற்பு குறித்து தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, "காட்சிகள் அதிகரிக்கப்பட்டு, பெரிய திரையரங்குகள் கிடைத்துள்ளன. முதல் நாளை விட இரண்டாம் நாள் வசூல் இரட்டிப்பாகியுள்ளது.அனைவரும் கொடுத்த வரவேற்புக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார்.