

எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் உள்ளிட்ட 60, 70களின் நாயகர், நாயகிகளுக்கு இன்றளவும் ரசிகர்களாக ஒரு பெரும் பட்டாளமே இருக்கிறது என்பதை இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இலவச சினிமா காட்சி திரையிடப்பட்டுக் கொண்டிருக்கும் திரையரங்குகள் கண்முன் நிறுத்திக்கொண்டிருக்கின்றன.
கிராமங்களில், ‘என் தலைவன் கத்தியை சுழற்றி வீசுற.. காட்சி ஒண்ணே போதுமே’ என்று எம்.ஜி.ஆர், சிவாஜியை மெச்சிக்கொள்ளும் உழைக்கும் சாமானியர்களின் பேச்சு இன்றைக்கும் ரசிக்கும்படியாகவே இருக்கும். அதேபோல சென்னை யில் அபிராமி மால், சத்யம் ஆகிய இரு திரையரங்குகளிலும் கடந்த செப்டம்பர் 16 முதல் இன்றளவும் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கும் கருப்பு வெள்ளைப் படங்களை கைதட்டி, விசில் அடித்து மனம் குளிர ரசித்து ரசித்து பார்த்து மகிழ்ந்து ஒரு திருவிழாவாகவே கொண்டாடி வருகிறார்கள்.
அனிமேஷன், 3 டி, கிராபிக்ஸ் என்று மாறிவரும் நவீன சினிமாத் தளம் ஒரு பக்கம் இருக்க இந்த படங்கள், அதிநவீன திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருவதை ரசிகர்கள் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை கண்ணோட்டமாக பார்க்க சென்னை, சத்யம் திரையரங்கம் சென்று பார்த்தால் மேளதாளம், கட்-அவுட், பாலபிஷேகம்னு ரசிகர்கள் படு அமர்க்களப்படுத்தியபடி இருக்கிறார்கள்.
அதைப்பற்றி, சத்யம் திரை யரங்கத்தில் படம் பார்க்க வந்தி ருந்த எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான சைதாப்பேட்டையைச் சேர்ந்த ராஜ்குமாரிடம் பேசிய போது, "கடந்த ஒரு வாரமா ஆனந்தத்தில் மிதக்குறோம்னுதான் சொல்லணும். தலைவர் படத்தை 12 வயசுல பார்க்க ஆரம்பிச்சவன் நான். இன்னைக்கு இப்படி ஒரு ஏ.சி தியேட்டர்ல அமர்ந்து பார்ப்போம்னு நினைச்சுக்கூட பார்த்ததில்லை. பலரும் இருக்கை கிடைக்காமல் திரும்பி செல்கிற சூழல் கூட ஏற்பட்டுடுச்சி. அவரோட ஒவ்வொரு படத்தையும் பாடமாகத்தான் நெனைச்சிக்கிட்டிருக்கோம். உழைப்புக்கு ஒரு படம், கல்விக்கு ஒரு படம், ஒற்றுமைக்கு ஒரு படம்னு...
இந்த சமூகத்திற்கு எவ்ளோ நல்ல நல்ல விஷயங்களை தலைவர் விதைச்சிக்கிட்டு போயி ருக்கார். இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த இந்திய சினிமா நூற்றாண்டு விழா குழுவுக்கும், அரசுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கோம்!" என்றார்.
சினிமாவையும் எம்.ஜி.ஆரை யும் எந்த அளவுக்கு மக்கள் நேசிக்கிறார்கள் என்பதற்கு இது ஒன்று போதாதா?