

'வீரம்' படத்தின் இசை டிசம்பர் 20ம் தேதியும், 'ஜில்லா' படத்தின் இசை டிசம்பர் 21ம் தேதியும் வெளியாகும் என அறிவிப்பு.
அஜித்தின் 'வீரம்', விஜய்யின் 'ஜில்லா' ஆகிய படங்கள் ஜனவரி 10, 2014ல் வெளியாகும் என அறிவித்து அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இரண்டு படங்களுக்கான விளம்பரப்படுத்தும் பணிகளும் இசை வெளியீட்டில் இருந்து ஆரம்பிக்கும் என ரசிகர்களும் காத்திருந்தார்கள். இதனால் இசை வெளியீடு எப்போது என்று ஆர்வத்துடன் எதிர்நோக்கி இருந்தார்கள்.
'ஜில்லா' படத்தின் இசை டிசம்பர் 21ம் தேதி வெளியாகும் என்று 'ஜித்தன்' ரமேஷ் தனது ட்விட்டர் தளத்தில் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து 'வீரம்' படத்தின் இசை வெளியீடு எப்போது என்று அஜித் ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்தார்கள்.
இந்நிலையில், அஜித்தின் 'வீரம்' இசை டிசம்பர் 20ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள். பாக்ஸ் ஆபிஸில் ஒரே நாளில் வெளியாக இருக்கும் இரண்டு படங்களின் இசையும், ஒரு நாள் இடைவெளியில் வெளியாக இருக்கிறது.
'வீரம்' படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத்தும், 'ஜில்லா' படத்திற்கு இமானும் இசையமைத்து இருக்கிறார்கள். 'வீரம்' படத்தின் இசையை ஜிங்கிள் நிறுவனமும், 'ஜில்லா' படத்தின் இசையை ஸ்டார் மியூசிக் நிறுவனமும் வெளியிட இருக்கின்றன.