மாணவர்கள் அறவழிப் போராட்டத்தை முடித்துக் கொள்ள ரஜினிகாந்த் வேண்டுகோள்

மாணவர்கள் அறவழிப் போராட்டத்தை முடித்துக் கொள்ள ரஜினிகாந்த் வேண்டுகோள்
Updated on
1 min read

அறவழிப் போராட்டத்தை மாணவர்கள் அமைதியாக முடித்துக்கொள்ள நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இந்திய சரித்திரத்தில் தங்க எழுத்துகளால் எழுதக் கூடிய ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக ஒன்றுதிரண்ட மாணவ, மாணவியர்களுக்கும், இளைஞர்களுக்கும், தாய்க்குலமும், அனைத்து தமிழ் மக்களும் நடத்திய, இதுவரைக்கும் வரலாறு கண்டறியாத அமைதியான, ஒழுக்கமான ஓர் அறவழிப் போராட்டத்தை நடத்தி உலகிலுள்ள அனைவரின் கவனத்தை ஈர்த்துப் பாராட்டைப் பெற்று வெற்றிமாலை அணியும் இந்த நேரத்தில் இப்போது நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களை பார்த்து நான் மிகவும் வேதனையடைகிறேன்.

மத்திய, மாநில அரசாங்கத்திலிருந்தும் பெரிய பெரிய நீதியரசர்கள், வழக்கறிஞர்களிடமிருந்தும் நிரந்தர ஜல்லிக்கட்டுக்கு இவ்வளவு உறுதி கூறிய பின்பு அதற்கு கவுரவம் கொடுத்து, அவர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்கள் கூறிய நாட்கள் வரைக்கும் அமைதி காப்பதுதான் கண்ணியமான செயலாகும்.

இப்போது சில சமூக விரோத சக்திகள் இவ்வளவு போராடிய உங்கள் உழைப்புக்கும், முயற்சிக்கும் நீங்கள் சம்பாதித்த நற்பெயருக்கும், இவ்வளவு நாட்கள் உங்கள் போராட்டத்துக்கு உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும் இருந்த காவல்துறையினருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவதற்கு நீங்கள் இடம் கொடுக்காமல் உடனே அமைதியாக இந்த அறவழிப் போராட்டத்தை முடித்துக்கொள்ளுமாறு நான் தாழ்மையுடனும், பணிவுடனும் வேண்டி கேட்டுக் கொள்கிறேன்'' என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in