

நடிகர் சந்தானம் நடித்த ‘தில்லுக்கு துட்டு’ என்ற படத்துக்கு தடை கோரிய மனுவை சென்னை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இது தொடர்பாக ‘பேப்பர் பிளைட் பிக்சர்ஸ்’ என்ற திரைப் பட தயாரிப்பு நிறுவனத்தின் உரிமை யாளர் முகமது மஸ்தான் சர்பூதீன் என்பவர் சென்னை 14-வது பெரு நகர கூடுதல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் ‘‘எங்கள் நிறுவனம் சார்பில், ‘ஆவி பறக்க ஒரு கதை’ என்ற தலைப்பில் இயக்குநர் ராம்பாலாவை வைத்து திரைப்படம் எடுக்க திட்டமிட்டு முன்தொகையும் கொடுத்தோம். இந்நிலையில் இயக்குநர் ராம்பாலா அந்தப் படத்தின் கதையைத் தழுவி ‘தில்லுக்கு துட்டு’ என்ற படத்தை நடிகர் சந்தானத்தை வைத்து எடுத்துள்ளார். எனவே படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்’’என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கில் ஏற்கெனவே இயக்குநர் ராம்பாலா ஆஜராகி விளக்கமளித்தார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த 14வது கூடுதல் பெருநகர குற்றவியல் நடுவர் அப்துல் மாலிக், ‘‘ ராம்பாலா எடுத்துள்ள கதைக்கும், மனுதாரரின் கதைக்கும் எந்த சம்பந்தமுமில்லை. ஆகவே ‘தில்லுக்கு துட்டு’ படத்தை வெளியிட தடையில்லை” எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.