

பொன்.ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படத்தின் நாயகியாக சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
'ரெமோ' படத்தைத் தொடர்ந்து மோகன் ராஜா இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் சிவகார்த்திகேயன். ஆர்.டி.ராஜா தயாரிக்கவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் துவங்க இருக்கிறது.
மோகன் ராஜா படத்தைத் தொடர்ந்து மீண்டும் பொன்.ராம் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சிவகார்த்திகேயன். ஜனவரி 2017ல் துவங்க இருக்கும் இப்படத்தையும் ஆர்.டி.ராஜா தயாரிக்க இருக்கிறார். 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினிமுருகன்' ஆகிய வரவேற்பைப் பெற்ற படங்களைத் தொடர்ந்து பொன்.ராம் - சிவகார்த்திகேயன் கூட்டணி இணைந்திருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
ஒளிப்பதிவாளராக பாலசுப்பிரமணியம், இசையமைப்பாளராக இமான், பாடலாசிரியராக யுகபாரதி, கலை இயக்குநராக முத்துராஜ், சண்டைப் பயிற்சியாளராக அனல் அரசு, எடிட்டராக விவேக் ஹர்ஷன், என படக்குழுவினர் ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறார்கள். இப்படத்தின் நாயகியாக சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். ஜனவரியில் படப்பிடிப்பு துவங்கப்படும் இப்படத்தை தீபாவளி 2017ல் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.