Published : 18 Dec 2013 12:00 AM
Last Updated : 18 Dec 2013 12:00 AM

பேரம் பேசும் தயாரிப்பு நிறுவனங்கள் : கேயார் எச்சரிக்கை

‘என்னமோ நடக்குது’ படத்தின் இசை வெளி யீட்டு விழா, சென்னையில் திங்கள்கிழமை நடந்தது. இதில் இயக்குநர்கள் பாரதிராஜா, பாலுமகேந்திரா, தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கேயார், இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், படத்தின் இசையமைப்பாளர் பிரேம்ஜி அமரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் இயக்குநரும் ஒளிப்பதிவாளரு மான பாலுமகேந்திரா பேசியதாவது:

‘‘பாடல்களை மட்டும் பார்த்து இந்தப் படத்தைப் பற்றி சொல்லிவிட முடியாது. அப்படி மதிப்பிடுவது தவறானது. 1977-ம் ஆண்டு வெளியான என் முதல் படமான ‘அழியாத கோலங்கள்’ படத்தில் அனைத்து பாடல்களையும் கங்கை அமரன் எழுதினார். அவரின் மகன் பிரேம்ஜியின் இசையில் உருவாகியிருக்கும் படம் இது. அவருக்கு வாழ்த்துகள். இந்த நிகழ்ச்சிக்கு வர இன்னு மொரு காரணம், என் நண்பன் பாரதிராஜா வந்திருப்பது’’ என்றார்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் பேசுகையில், ‘‘தற்போது சில தயாரிப்பாளர்கள் தவறான விஷயங்களில் ஈடுபடுகின்றனர். ஒரு படம் வெளியாகும்போது, அந்தப் படத்தின் விளம்பர பாணியில் வேறொரு படத்தின் பெயரை வைத்துக்கொண்டு ரிலீஸ் என்று போஸ்டர் ஒட்டுகின்றனர். ‘இவன் வேற மாதிரி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நேரத்தில் ‘இவள் ஒரு மாதிரி’ என்று பெயர் வைத்து ஒரு படத்தை வெளியிடத் தயாரானார்கள். இன்று இங்கே ‘என்னமோ நடக்குது’ படத்தின் இசை வெளியிடப்படுகிறது. இந்த நேரத்தில் ‘அந்த வீட்ல என்னமோ நடக்குது’ என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பை வெளியிடுகிறது. அவர்களிடம் இதுபற்றி கேட்டால் பேரம் பேசுகிறார்கள். இது சினிமாவுக்கு ஆரோக்கியமான விஷயம் அல்ல. இதுபோன்ற செயல்கள் தொடர்ந்தால் எல்லா திரை அமைப்புகளையும் கூட்டி அவர்களுக்கு ஒத்துழைப்பு தராமல் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

இயக்குநர் பாரதிராஜா பேசும்போது, ‘‘சமீபகால சினிமாவின் வளர்ச்சி பிரமாண்ட வளர்ச்சியாக எனக்குத் தெரிகிறது. முன்பு 10 மரங்கள் கொண்ட சிறு தோப்பாக இருந்த சினிமா, இப்போது நிறைய படங்கள், நிறைய இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என மலைபோல வளர்ந்திருக்கிறது. அப்போது இருந்த 10 மரங்களில் சந்தன மரமும் தேக்கு மரங்களும் இருந்தன. பெரிய மலையில் சிறுசிறு கள்ளிச்செடிகள் முளைக்கவே செய்யும். அதைப் பெரிதுபடுத்த வேண்டாம்.

இப்போது படித்த இளைஞர்கள் நிறைய பேர் வருகிறார்கள். நல்ல படைப்புகளைத் தருகிறார்கள். அவர்கள் எல்லோரும் தேக்கு மரங்களாகவும் சந்தன மரங்களாகவும் வளர வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x