

ரஜினி நடிப்பில் வெளியாக இருக்கும் 'கபாலி' இணையத்தில் வெளியாகவில்லை, அது வெறும் வதந்தியே என படக்குழு சார்பில் தெரிவித்தார்கள்.
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கபாலி'. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தை தாணு தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் தணிக்கை பணிகள் முடிந்து ஜூலை 22ம் தேதி வெளியாக இருக்கிறது. டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்டு அனைத்து திரையரங்குகளிலும் முதல் வாரத்துக்கான விற்பனை முடிவுற்று இருக்கிறது. பல ரசிகர்கள் டிக்கெட் கிடைக்காமலும், டிக்கெட் விலை அதிகமானதாலும் தங்களுடைய ஆதங்கத்தை பதிவு செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், இணையத்தில் 'கபாலி' படம் முழுமையாக வெளியாகிவிட்டதாக செய்திகள் வெளியாகின. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து படக்குழுவிடம் விசாரித்த போது, "'கபாலி' படம் இணையத்தில் வெளியாகவில்லை. இது முழுக்க முழுக்க வதந்தியே. படம் வெளியானாலும் இணையத்தில் வெளியிடாமல் இருக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இணையத்தில் வெளியாகும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுப்போம்.
மேலும், பல்வேறு இணையதளங்கில் 'கபாலி' முழுமையாக என பல்வேறு லிங்க்குகள் இருக்கிறது. அவற்றில் சில வைரஸூம் அடங்கும். அவற்றை பார்த்து இணையத்தில் 'கபாலி' வெளியானது என செய்திகள் பரப்பிவிட்டார்கள்" என்று தெரிவித்தார்கள்.