

பார்வையற்ற செஃப் ஒருவரின் காதலும், குழப்பங்களும் அதற்குக் கிடைக்கும் தீர்வுகளே 'அதே கண்கள்'.
15-வது வயதில் பார்வையை இழந்தவர் செஃப் கலையரசன். ஒரு நாள் கலையரசனின் ரெஸ்டாரன்டுக்கு வருகிறார் ஷிவதா. அவரின் வருகை அடுத்தடுத்து நிகழ, இருவருக்கும் காதல் மலர்கிறது. இதனிடையே ஜனனி கலையரசன் மீதான காதலை வெளிப்படுத்துகிறார். குழப்பத்தில் தவிக்கும் கலையரசனுக்கு ஒரு நாள் திடீர் விபத்து நிகழ்கிறது. அந்த விபத்துக்குப் பின் கலையரசன் பெற்றதும், இழந்ததும் என்ன என்பதை த்ரில்லர் பாணியில் திரைக்கதை ஆக்கி இருக்கிறார்கள்.
சிம்பிளான கதையை வைத்துக்கொண்டு மிக நேர்த்தியாக திரைக்கதை அமைத்த விதத்தில் அறிமுக இயக்குநர் ரோஹின் வெங்கடேசன் கவனம் ஈர்க்கிறார்.
பார்வை இழந்த செஃப், பிரியமான காதலன், குழப்பத்தில் தவிக்கும் சாதாரண இளைஞன், பிரச்சினையின் தீவிரம் உணர்ந்து தனிநபராய் களத்தில் இறங்கும் சாதுர்யம் மிக்கவன் என கலையரசனுக்கு சவாலான கதாபாத்திரம். அதை இன்னும் சரியாகக் கையாண்டிருக்கலாம்.
ஷிவதா கதை நகர்த்தலுக்கான முக்கியக் கருவியாக செயல்பட்டிருக்கிறார். இரு வேறு பரிமாணங்களில் அழுத்தமாக முத்திரை பதித்து, கதாபாத்திரத்துக்கான நடிப்பை நிறைவாக அளித்திருக்கிறார். ஷிவதாவுக்கு அடுத்தடுத்த படங்கள் கிடைப்பதற்கான வெளிச்ச வாய்ப்புகள் நடிப்பில் தெரிகிறது.
பால சரவணன் நகைச்சுவை மற்றும் குணச்சித்ர நடிப்பை ஒருங்கே வெளிப்படுத்தி மனதில் நிற்கிறார். உறுத்தாமல், திணிக்காமல், கதையோட்டத்தைக் கெடுக்காமல் பால சரவணன் செய்யும் நகைச்சுவை கலகலப்பு.
ஜனனி நடிப்பதற்கான களம் அமையவில்லை. வருகின்ற காட்சிகளில் தன் இருப்பைப் பதிவு செய்துவிட்டுச் செல்கிறார். ஊமை விழிகள் இயக்குநர் அரவிந்த் ராஜ் சில காட்சிகளில் வந்து போகிறார்.
ரவிவர்மன் நீலமேகத்தின் ஒளிப்பதிவும், ஜிப்ரானின் இசையும் படத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன. ரவிவர்மன் நீலமேகத்தின் கேமரா சென்னை, கன்னியாகுமரி பகுதிகளையும், படத்தின் டோனையும் கண்களுக்குள் கடத்துகிறது.
ஜிப்ரானின் இசையில் தந்திரா, இதோ தானாகவே பாடல்கள் ரிப்பீட் ரகம். பின்னணி இசையும், விசிலின் லயமும் ரசிக்க வைக்கின்றன. லியோ ஜான்பாலின் எடிட்டிங் கச்சிதம்.
அன்பு, வாக்கு, நம்பிக்கை என்று வாழும் கதாபாத்திரம் அது பொய்யானதும் அதற்கு எதிராகத் திரும்புவதாக காட்சிப்படுத்தப்பட்டிருப்பது சாதாரண மனிதன் மனநிலையை பிரதிபலிப்பது போல இருப்பதால் நம்பகத்தன்மையை வரவழைக்கிறது. பார்வை சம்பந்தப்பட்ட காட்சிகளைக் கூட ஏற்றுக்கொள்ள முடிகிறது. ஆனால், அந்த நெட்வொர்க் எப்படி இயங்குகிறது? எப்படி அந்த நபர்களை யார் மூலம் தேர்வு செய்கிறார்கள்? என்பதற்கான விளக்கம் போதுமானதாக இல்லை.
தாமஸ் யார்? எப்படி அந்த இருவர் கூட்டணியில் மூன்றாவது நபராக இணைந்தார்? என்பதற்கான காரணம், நோக்கம் சொல்லப்படவில்லை. விக்ரம்- ப்ரியா போர்ஷனை கொஞ்சம் குறைத்திருந்தால் படத்தில் விறுவிறுப்பு கூடியிருக்கும்.
இவற்றை தவிர்த்துப் பார்த்தால் 'அதே கண்கள்' நன்றாக எடுக்கப்பட்ட நேர்மையான படமாக உள்ளது.