

'காற்று வெளியிடை' திரைப்படம் வெளியாகவிருக்கும் நிலையில், இயக்குநர் மணிரத்னமும் இசையமைப்பாளர் ரஹ்மானும் தங்கள் தொழில் பயணத்தின் சுவாரஸ்ய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
காற்று வெளியிடை இசையில் ரஹ்மான் உங்களை எவ்வாறு ஆச்சரியப்படுத்தினார்?
மணி: அவர்... (யோசிக்கிறார்)
ரஹ்மான்: நான் தரும் ஆச்சரியம் சொல்லாமல் அடிக்கடி அமெரிக்கா பறந்து செல்வதுதான் (சிரிக்கிறார்)
மணி: படமே பைலட்டை பற்றிதானே, பறந்தால் பரவாயில்லை
(இருவரும் சிரிக்கின்றனர்)
மணி: வழக்கத்துக்கு மாறான காட்சி சூழலுக்கு பாடல் போடும்போது ஆர்வம் இன்னும் அதிகமாகும். வழக்கத்துக்கு மாறாக பாடலும் வித்தியாசமாக இருக்கும்.
கேள்வி: காற்று வெளியிடை படத்தின் போது பாடல்களைப் பொருத்த வரை மணிரத்னம் வளைந்து கொடுத்தது எவ்வளவு தூரம் இருந்தது. இதற்கு முந்தைய படங்களில் அப்படி அவர் வளைந்து கொடுத்து போனது எப்படி இருந்தது?
மணி: (ரஹ்மானிடம்) நீங்கள் பொய்யும் சொல்லலாம் (சிரிக்கிறார்)
ரஹ்மான்: மக்கள் நம்பமாட்டார்கள் (சிரிக்கிறார்). இந்திய இசையில் வழக்கமில்லாத வித்தியாசமான விஷயங்களை பலர் முயற்ச்சித்திருக்கின்றனர். சில சமயம் அது அரைவேக்காடு முயற்சியாக இருக்கும். இந்த படத்தில் ஒரு டாங்கோ இசையை மணி வேண்டுமென்றார். டாங்கோ ஒரு பிரபலமான நடன வடிவம். எனவே எனக்கும் ஆர்வம் அதிகம் இருந்தது.
அந்தப் பாடலை முடித்ததும் அதில் புதிதாக எதுவும் இல்லை என எனக்குத் தோன்றியது. நமது மக்களுக்கு இது எந்த விதத்தில் புதிதாக இருக்கும் என தோன்றியது. தொடர்ந்து அந்த மெட்டை மெருகேற்றினோம். 15 நிமிடப் பாடல் நீளத்தை குறைத்தோம். இன்னும் ஒரு விஷயம் குறைகிறது, உங்கள் வழக்கமான முத்திரை இல்லை என மணி சொன்னார். பிறகு சில மாற்றங்கள் செய்தேன். அப்போதுதான் பாடல் முழுமையடைந்ததாகத் தோன்றியது.
ஒரு பாடலை கட்டமைத்து, நமது கலாச்சாரத்துக்கு பழக்கமில்லாத புதிய மெட்டை இசைக்கும்போது புதிய யோசனைகள் முக்கியம். மணிரத்னம் அதைத் தந்தார். அதில் வித்தகர் அவர். என்ன குறைகிறது என சொல்லுவார். பலமுறை அப்படி உதவியிருக்கிறார். பாம்பே திரைப்படத்தின் பிந்தைய பகுதியில், உண்மையாக நடந்த விஷயங்களை, ஆவணப் படம் போல காட்டியிருந்தார். அந்த காட்சிகளில் மக்களை எப்படி உட்கார வைப்பது என யோசித்தோம். அப்போது, அப்போது இந்தியப் பாரம்பரிய இசையைக் கலந்து பின்னணி இசை போடலாம் என யோசனை சொன்னார். அதற்கான பாராட்டு அவருக்குதான் போக வேண்டும்.
கேள்வி: 25 வருடங்களுக்கு முன்னால் போகலாம். வெற்றிகரமாக இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றியிருந்தீர்கள். அற்புத இசை தந்து கொண்டிருந்த ரஹ்மானின் சிறிய அறைக்குள் நுழையும்போது என்ன யோசித்துக் கொண்டிருந்தீர்கள்?
மணி: ஆச்சரியமாக இருந்தது. வசதியான அந்த சிறிய அறைக்குள் சென்று சந்தித்தேன். சில மெட்டுகளை வாசித்துக் காட்டினார். அற்புதமாக இருந்தது. அதை யார் கேட்டிருந்தாலும் அவர்களுக்கு பிடித்திருக்கும். அப்போதே அவர் ஒரு இசையமைப்பாளராக முழுமையாக உருவாகியிருந்தார். அந்த கட்டத்திலிருந்து தொடர் வளர்ச்சி மட்டுமே இருந்தது. அவரது இசையில் அப்போதே முழுமை இருந்தது. அவ்வளவு கவர்ச்சிகரமான இசையை நான் கேட்டிருக்கவில்லை. முற்றிலும் புதிய அனுபவம் அது.
கேள்வி: ரஹ்மான், அப்போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது? அவரை ஆச்சரியப்படுத்த வேண்டும் என்ற உணர்வு இருந்ததா?
ரஹ்மான்: நான் அந்த கட்டத்தில் பல நிராகரிப்புகளை சந்தித்திருந்தேன். 100 விளம்பரப் பாடல்கள் இசையமைத்தால் அதில் 2 மட்டும் தேர்வாகும். எனவே அந்த 'ஜென்' மனநிலையில் இருந்தேன். மணிரத்னம் வந்து பாடல் கேட்டு சென்றுவிட்டு திரும்ப வர மாட்டார் என நினைத்திருந்தேன். அதற்கு தயாரான மனநிலையில் இருந்தேன். அவர் திரும்ப வந்தால் அது ஒரு ஆச்சரியமாக இருக்கும். அதனால் அமைதியாக இருந்தேன்.
மணிரத்னம்: (சிரித்துக் கொண்டே) அன்றிலிருந்து நான் இங்கேயே தான் இருக்கிறேன்
ரஹ்மான்: எதிர்பார்ப்பில்லாத நிலையில் தான் இருந்தேன். அவரது படங்கள் எனக்கு பிடிக்கும். நான் சிறிய சிறிய விளம்பரப் பாடல்கள் மட்டுமே செய்திருந்தேன். அது முழு பாடல்களுக்கு எப்படி இருக்கும் என எனக்கு தெரியவில்லை. விளம்பரப்படங்களில் நான் செய்திருந்த நேர்த்திக்கு ஒரு முழு பாடலை செய்ய வேண்டும் என்பது கடினமானதே. பிறகு பாடல் எப்படி இருக்கலாம் என மணி எனக்கு யோசனை சொன்னார். அப்போது மிகத் தீவிரமாக வேலை செய்துகொண்டிருந்தேன். ஏதாவது சரியில்லையென்றால் சட்டென பாதிக்கப்பட்டுவிடுவேன்.
மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தது, நாங்கள் ஒலிப்பதிவில் கேட்கும்போது இருந்த தரம் திரையரங்கில் ஒலிக்கும்போது மொத்தமாகக் குறைந்திருக்கும். இங்கு இப்படித்தான் இருக்குமென்றால் நான் இசையமைக்க விரும்பவில்லை என்று கூறினேன். எல்லாம் மாறும், கவலைப்படாதே என ஸ்ரீதரும், மணி சாரும் ஆறுதல் சொன்னார்கள். மாறவும் செய்தது.
கேள்வி: நீங்கள் ஒரு ஆசான் அல்ல, உடன் சேர்ந்து வேலை செய்பவர், உருவாக்குபவர் என ரஹ்மான் சொல்லியிருக்கிறார். முடிக்க வேண்டிய நாள் நெருங்கும்போது, படம் சம்பந்தமாக மற்ற விஷயங்களையும் கவனிக்க வேண்டி வரும் போது எப்படி பொறுமையாக பாடல் உருவாக்கத்தில் உதவ முடிகிறது?
மணிரத்னம்: நான் பொறுமையாக இருப்பேன் என யார் சொன்னது.
(இருவரும் சிரிக்கின்றனர்)
அது பொறுமை என சொல்ல முடியாது. ரஹ்மான் எப்படி வேலை செய்வார் என எனக்குத் தெரியும். படத்துக்கு முக்கியமான பாடலாக இருந்தால் அவர் நேரம் எடுத்துக் கொள்வார். தனது பணியின் ஒவ்வொரு சிறிய அம்சத்தையும் ரஹ்மான் போல பார்த்து பார்த்து செதுக்குபவரை நான் பார்த்ததில்லை. அது தரத்தை இன்னும் உயரத்தும். யார், எந்தத் துறையில் இருந்தாலும் அவர்கள் பணி இதுபோல இருக்க வேண்டும் என நினைக்கிறேன். ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் உன்னிப்பாக பார்த்து வேலை செய்வார்.
எனவே பாடல் பற்றி நான் கவலைப்பட வேண்டியதில்லை. அது பாதுகாப்பாக சரியான ஆளின் கைகளில் தான் இருக்கிறது என்ற உணர்வு வரும். அதை சரியாக அவர் தருமளவுக்கு நாம் அவரை ஊக்குவிக்கிறோமா என்பது மட்டுமே நம்மிடம் உள்ளது.
கேள்வி: ரஹ்மான், ஓர் இத்தாலிய வார்த்தை குறித்து உங்களிடம் கேட்க விரும்புகிறேன். 'Sprezzatura' என்ற வார்த்தை அது. மணிரத்னத்திடம் வேலை செய்யும்போது குறிப்பிட்டு எப்பொதெல்லாம் அந்த வார்த்தையை உங்களுக்கு நினைவூட்டியிருக்கிறார்.
மணிரத்னம்: என்ன வார்த்தை அது? அதை முதலில் சொல்லுங்கள்
ரஹ்மான்: Sprezzatura (ஸ்ப்ரெஸ்ஸடூரா) - அப்படியென்றால் சிக்கலான, கடினமான விஷயங்கள் இருந்தாலும் வெளியிலிருந்து பார்க்கும்போது எளிதாகத் தெரிவது.
எல்லா உயர்ந்த கலைஞர்களுக்குமே அந்த பண்பு இருக்கிறது என நினைக்கிறேன். கடினமாக உழைத்து ஒரு பாடலை செய்வோம். கடைசியில் கேட்கும்போது அது மிக எளிமையான பாடலாக தோன்றும். சில சமயம் எளிமையான பாடல்களுக்கு அதிகபட்ச இசையை சேர்க்க வேண்டும் எனத் தோன்றும். சில சமயம் அது அதிகபட்சமாக இருக்கும். சில சமயம் வெறும் பியானோ இசை மட்டுமே இருக்கும். அதை ஒப்புக்கொள்ள தைரியம் வேண்டும்.
பல முறை மற்ற இயக்குநர்களிடம் பணியாற்றும்போது வேறு மாதிரி நடந்துள்ளது. சார் இன்னும் அதிகமாக சேருங்கள், தாளம் வேண்டும், இசை வேண்டும், பத்தாது என்பார்கள். ஆனால் மணிரத்னம் நான் சொல்வதை ஏற்றுக்கொள்வார். இதுதான் உனக்கு வேண்டுமா, சரி என்பார்.
வெள்ளைப் பூக்கள் பாடல் வெறும் குரலும், கிடாரும் தான். படத்தின் கடைசியில் வரும். வான் வருவான் பாடலும் பியானோவும், குரலும் மட்டும்தான். பிறகு நானாக சில விஷயங்களை சேர்த்தேன்.
இப்போது காலம் மாறிவிட்டது என நினைக்கிறேன். உங்கள் கலையில் குழப்பமின்றி தூய்மையாக இருப்பது அவசியம் என நினைக்கிறேன்.
கேள்வி: உங்கள் படங்களைத் தாண்டி ரஹ்மானின் மற்ற படங்களுக்கான இசையை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?
மணிரத்னம்: நானும் அவரது ரசிகன் தான். ரசிகர்கள் எப்படி அவரது இசையை ரசிக்கிறாரகளோ நானும் அப்படி ரசிக்கிறேன். அற்புதமான இசையைத் தருகிறார். சர்வதேசத் தரத்துக்கு நமது இசையை கொண்டு சென்றுள்ளார். எல்லை கடந்து எடுத்துச் சென்றுள்ளார். அவரை நினைத்து பெருமைப்படுகிறேன்.
ரஹ்மான்: கற்றறிந்த மக்களோட இருக்கும்போது நாமும் அறிவு பெறுவோம் என ஒரு திருக்குறளில் சொல்வது போல
(மணிரத்னம் சிரிக்கிறார்)
ரஹ்மான்: அந்தக் குறள் என் மனதில் எப்போதும் இருக்கிறது. அறிவில் சிறந்தவர்களுடன் பணியாற்றும்போது அதற்கு இணையாக இருக்க வேண்டும். மணிரத்னம், வைரமுத்து போன்றவர்களுடன் வேலை செய்தது அப்படித்தான். மற்ற பாடலாசிரியர்களுடன், மற்ற மொழிகளில், ஏன் ஹாலிவுட்டில் இசையமைக்கும்போது கூட, அதை வைரமுத்து தந்த சிந்தனைகளுடன் ஒப்பிடும்போது, அது அற்புதமானதாக இருக்கும். நான் வைரமுத்து அவர்களுடன் பணியாற்றியதையே பெருமையாகக் கருதுகிறேன். அவர் தரத்தை வெகுவாக உயர்த்திவிட்டார்.
கேள்வி: 25 வருடங்கள் ஒரு இயக்குநருடன் பணியாற்றுவது என்பது பெரிய கால நேரம். அவர் புதிதாக ஒரு கதையை உங்களிடம் சொல்ல வரும்போது உங்கள் மனதில் என்ன ஓடும்? முந்தைய படத்தை விட பாடல்கள் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற அழுத்தம் இருக்குமா? (இப்போது ஓகே கண்மணியை விட காற்று வெளியிடை சிறப்பாக இருக்க வேண்டும் என அழுத்தம் இருந்ததா)
ரஹ்மான்: எப்போதும் அழுத்தம் இருக்கும். அவரோடு பணியாற்றுவதால் அல்ல. நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கிவிட்டோம். ஓ இவர்கள் இருவரும் சேர்கிறார்கள். என்ன செய்யப்போகிறார்கள் என எதிர்பார்ப்பு உருவாகும். அடுத்து என்ன மணிரத்னம் படம் என மக்கள் கேட்பார்கள். அப்போது "அடடா" என உணர்வேன்.
இப்போது நிலை மொத்தமாக மாறிவிட்டது. நாங்கள் ஒரு 'பிராண்ட்' உருவாக்கிவிட்டோம். மக்கள் கண்டிப்பாக புதிதாக எதிர்பார்ப்பார்கள் என மனது தன்னிச்சையாக தயாராகிவிடும்.
கேள்வி: மணி சார், வேறு ஒரு இசையமைப்பாளருடன் பணியாற்ற வேண்டும் என தோன்றியிருக்கிறதா. ஏனென்றால் குழுவில் உங்கள் தொழில்நுட்ப கலைஞர்களை மாற்றியிருக்கிறீர்கள். வேறு நடிகர்களுடன் பணியாற்றியுள்ளீர்கள்.
ரஹ்மான்: இதுபோல யோசனைகள் எல்லாம் தராதீர்கள் (சிரிக்கிறார்)
மணி: (சிரிக்கிறார்) நான் ஏன் அப்படி செய்ய வேண்டும்?
கேள்வி: ரஹ்மான் சார், ஒரு படத்தில் வெவ்வேறு விதமான பாடல்கள் இருப்பது பற்றி பேசியிருக்கிறீர்கள். கமர்சியலான பாடலுக்கு சமமாக ஒரு மெலடி பாடலை இசைப்பது என ஒரு சமநிலையை பின்பற்றுகிறீர்கள். உதாரணமாக பம்பாய் படத்தில் ஹம்மா ஹம்மா பாடலுக்கு சமமாக கண்ணாளனே பாடல் இருந்தது. இதை தெரிந்தே தான் செய்கிறீர்களா?
ரஹ்மான்: அது முக்கியமான விஷயம். ஒரு படம் அனைவரிடமும் போய் சேர்கிறது. என்ன ராகம், என்ன கருவி என புரிந்து கேட்பவர்களுக்கு மட்டுமல்ல. முழுமையாக இருக்க வேண்டும். அதேநேரத்தில் கதையோட்டத்தோடு இருக்க வேண்டும். பாடலை எடுத்தாலும் படத்துக்கு பாதிப்பு கிடையாது என்ற நிலை இருக்கக் கூடாது. மணிரத்னம் படத்தில் பாடலை எடுத்துவிட்டால் படம் புரியாது. அப்படி உருவாக்கியிருப்பார். அதில் ஒரு உணர்ச்சி, ஒரு கதையை சொல்லியிருப்பார். அப்படி இருக்க வேண்டும்.
கேள்வி: மணி சார், கருத்து வேறுபாடு வரும்போது எப்படி தீர்த்துக் கொள்வீர்கள்?
மணி: அதைத் தாண்டி யோசிப்போம். மாற்று வழிகளைப் பார்ப்போம். அவ்வளவுதான். எனது காட்சி பிடிக்கவில்லை என்று யாராவது சொன்னால் நான் விட்டுவிடமாட்டேன். ஆனால் ரஹ்மான் அப்படியல்ல. பாடல் நன்றாக இல்லை என்றாலும் எளிதாக ஏற்றுக்கொள்வார்.
கேள்வி: ரஹ்மான் சார், மணிரத்னத்துக்காக நீங்கள் அதிக நேரம் எடுத்துக் கொண்ட, கடினமான பாடல் எது?
ரஹ்மான்: ஒவ்வொரு படத்திலும் ஒரு பாடல் இருக்கிறது என நினைக்கிறேன். காற்று வெளியிடை படத்தில் டாங்கோ பாடல். வீரபாண்டி கோட்டையிலே அதிக நேரம் பிடித்தது. குச்சி குச்சி ராக்கமா முதலில் மெதுவான பாடலாக இருந்தது. பின்னர் அதை மாற்றினோம்.
கேள்வி: ரஹ்மானின் நேரத்துக்கேற்றவாரு எப்படி வேலை செய்கிறீர்கள். பல இயக்குநர்கள் அவர் நள்ளிரவில் இசையமைப்பது குறித்து வித்தியாசமாக பேசியிருக்கிறார்கள். உங்களுக்கு அந்த விசித்திரங்கள் பழகியிருக்கும். இருந்தாலும் அது பற்றி இன்னும் கொஞ்சம் பகிருங்கள்.
மணி: வரிசையில் முதலில் நிற்பவன் என்ற அடிப்படையில் சில நன்மைகள் உள்ளன (சிரிக்கிறார்). சீக்கிரமாக புரிந்து கொண்டு அதற்கேற்றவாரு மாற்றிக் கொண்டேன்.
ரஹ்மான்: நான் அவரை அதிக நேரம் இருக்க வைத்ததில்லை. அதிகபட்சம் இரவு 1 மணி வரை இருப்பார். அது கூட ஒரு சில சமயங்கள் தான்.
கேள்வி: அதேபோல மணிரத்னத்திடம் இருக்கும் விசித்திரம் என்ன?
மணி: ஷ்.... ஏன் இந்த கேள்வியெல்லாம்? அப்படி எதுவுமில்லைதானே ரஹ்மான் (சிரிக்கிறார்)
ரஹ்மான்: (யோசிக்கிறார்) பெரிதாக ஒன்றுமில்லை. பட வெளியீடு சமயத்தில் பரபரப்பாக இருப்பார். அப்போது அதிக அழுத்தம் இருக்கும். வெளியீடு தேதி நெருங்குகிறது, முடித்துவிடுவோமா என கேட்டுக்கொண்டிருப்பார். அது எனக்கும் நல்லதுதான். அப்போதுதான் மற்ற விஷயங்களை விலக்கி வைத்து விட்டு இதில் மட்டும் கவனம் செலுத்துவேன். அவருக்கு என்னை கையாளத் தெரியும்.
கேள்வி: படங்கள், இசை தவிர வேறு என்னவெல்லாம் பேசுவீர்கள்?
மணி: ரஹ்மான் எப்போதும் தத்துவம், வாழ்க்கை என பேசுவார்.
ரஹ்மான்: நகைச்சுவையாக சொல்கிறீர்கள் என நினைக்கப்போகிறார்கள்
மணி: இல்லை உண்மையாக. அவருடன் பேசும்போது அது எப்படி வேண்டுமானாலும் மாறும். ஆனால் எங்கு போனாலும் மீண்டும் இசைக்கு வந்துவிடுவோம்.
ரஹ்மான்: ஆனால் எல்லாமே பாடலுக்காகதான். அதன் வெளிப்பாடுதான் எல்லாம். அப்படி உரையாடும்போது சில யோசனைகள் வரும். ஃபனா பாடல் அப்படித்தான் உருவானது
கேள்வி: ரஹ்மான் நீங்கள் ஆன்மீகவாதி, மணிரத்னம் நாத்திகர். உங்கள் இருவருக்கும் நடுவில் ஆன்மீகம் பற்றிய உரையாடல் வந்திருக்கிறதா.
ரஹ்மான்: நம்பிக்கை தனிப்பட்ட விஷயம் என நினைக்கிறேன். அவருடன் பணியாற்றியதில் நான் தெரிந்து கொண்டது என்னவென்றால், ஒருவர் நல்லவராக இருக்க ஆன்மீகத்தில் ஈடுபாடு இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதே போல அதிக பக்தி இருப்பவர்கள் அனைவரும் உயர்ந்த மனிதர்கள் அல்ல. இதை ஒருவர் புரிந்து கொண்டாலே பாதி வேலை முடிந்துவிடும் என நினைக்கிறேன். சமுதாயத்தில் எந்த குழப்பத்தையும் உருவாக்க மாட்டோம். அதுதான் இறைவனின் எண்ணமும் கூட.
மணிரத்னத்தின் பெரும்பாலான படங்கள் மனிதத்தையே பேசியிருக்கின்றன. நம்பிக்கை என்பது பற்றி அவரது புரிதல் வேறொரு தளத்தில் இருக்கிறது என்பதை நாம் அதிலிருந்து புரிந்து கொள்ள முடியும். எனது புரிதலின் தளத்தில் அல்ல அது. ஆனாலும் அவர் குறித்து நான் புரிந்து கொள்ள முயற்சி செய்வேன். (மணிரத்னம் சிரிக்கிறார்) வாழ்க்கையே கற்றுக்கொள்வதுதான்.
மணி: ரஹ்மானுக்கு இறை நம்பிக்கை அதிகம். அது பார்க்க நன்றாக இருக்கிறது. அவரை புரிந்து கொள்ள முடியும்
ரஹ்மான்: நான் ஒருமுறை கூட என்னுடன் மெக்கா வாருங்கள் என இவரைக் கூப்பிட்டதில்லை.
மணி: (சிரித்துக்கொண்டே) ஆமாம். ஆனால் அவர் கூப்பிட்டாலும் நான் செல்வேன். அதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நாம் பல்வேறு நம்பிக்கையுடவர்களுடன் வாழ்கிறோம். அதை ஏற்றுக்கொள்ளும் முதிர்ச்சி இல்லையென்றால் இன்னும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் தான் இருக்கிறோம் என அர்த்தம்.
ரஹ்மான்: படங்கள் ஒரு ஒருங்கிணைக்கும் அம்சம் என நினைக்கிறேன். கலையே அப்படித்தான். பல்வேறு நம்பிக்கை கொண்டவர்கள் இணைந்து ஒரு படைப்பை தரும்போது எல்லாரும் படைப்பை மட்டுமே பார்ப்பார்கள். தனி நபரின் நம்பிக்கையை அல்ல.
</p><p xmlns=""><i><b>தி இந்து ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட ஸ்ரீநிவாச ராமானுஜத்தின் வீடியோ பேட்டி.</b></i></p><p xmlns=""><i><b>தமிழில்: கார்த்திக் கிருஷ்ணா</b></i></p>