

'புலி' இசை வெளியீட்டு விழாவில் தனது பேச்சை வைத்து மீம்ஸ் தயார் செய்தவர்களை கடுமையாக சாடியுள்ளார் டி.ராஜேந்தர்.
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, சுதீப் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'புலி'. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் டி.ராஜேந்தர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 'புலி' என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு கோர்வையாக தொடர்ந்து பேசினார். டி.ராஜேந்தரின் பேச்சை வைத்து மீம்ஸ் தயார் செய்து, இணையத்தில் வெளியிட்டார்கள்.
முதன் முறையாக 'புலி' மீம்ஸ் குறித்து டி.ராஜேந்தர் பேசியுள்ளார். அதில், " 'புலி' இசை வெளியீட்டில் பேசியதற்கு பிறகு, அதைப் போலவே பலர் பேச முயற்சி செய்யலாம். முடிந்தால் என்னைப் போல பேசட்டும். விஜய் இருக்கும் போது, அவருக்கு முன்னாலே பேச வேண்டும்.
கம்பியூட்டரில் உட்கார்ந்து மீம்ஸ் உருவாக்கக் கூடாது. மேடையில் பேச வேண்டும். எதுவுமே எழுதிக் கொண்டு வராமல் பேச வேண்டும். விஜய்க்கு முன்னால் பேசி, அவரிடமும் அவருடைய ரசிகர்களிடமும் கைதட்டல்கள் வாங்க வேண்டும்.
கழிவறையில் உட்கார்ந்து யார் வேண்டுமானாலும் பாடலாம். ஆனால் மேடையில் பாட வேண்டுமே. அப்படி பாடினால் மக்களும் ரசிக்க வேண்டும். யார் மீம்ஸ் போட்டால் எனக்கென்ன?. சும்மா இணையத்தில் உட்கார்ந்து கொண்டு எழுதக் கூடாது. அவர்கள் அனைவருமே பொதுமேடைக்கு வந்து கலக்க வேண்டும். அவர்களை நான் வரவேற்கிறேன்.
35 வருடமாக போராடி வரும் எனக்கே இந்நிலைமை என்றால், அவர்கள் பொதுமேடையில் பேசினால் ஆஃப் பண்ணிவிடுவார்கள்" என்று தெரிவித்துள்ளார் டி.ராஜேந்தர்.