பைரஸியை தடுக்க ராஜமெளலி யோசனை

பைரஸியை தடுக்க ராஜமெளலி யோசனை
Updated on
1 min read

இந்தியளவில் பெரும் எதிர்பார்ப்போடு, ஏப்ரல் 28ம் தேதி வெளியாகி இருக்கும் படம் 'பாகுபலி 2'. ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஆர்கா மீடியா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை தமிழகத்தில் ராஜராஜன் வெளியிட்டுள்ளார். விமர்சன ரீதியாகவும், மக்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது 'பாகுபலி 2'.

'பாகுபலி 2' படத்துக்கு திருட்டு விசிடி பிரச்சினை இருந்தது. ஆனால், அதையும் மீறி மக்கள் திரையரங்கிற்கு சென்று பார்த்திருக்கிறார்கள். இந்நிலையில் ராஜமெளலி அளித்த பேட்டி ஒன்றில் விசிடிக்கு எதிராக என்ன செய்யப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

அதில், "உலகம் முழுக்கச் சினிமாவைப் பிடித்திருக்கும் பிரச்சினை 'பைரஸி'. அதைத் தடுப்பது அவ்வளவு சுலபமல்ல. நானும் பல வருடங்களாக அதை எதிர்த்துப் போராடி வருகிறேன். இந்த நாட்களில் நான் ஒன்றை உணர்ந்துள்ளேன். திரையரங்கில், தொலைக்காட்சியில், இணையத்தில் என நமது படங்களைப் பல வழிகளில் நாம் திரையிட்டு வருகிறோம்.

நாம் திரையரங்க வெளியீட்டுக்கும், தொலைக்காட்சிக்கும் எனத் தனியாக வியாபார முறையைப் பின்பற்றி வருகிறோம். ஆனால் இணையம் என்னும் ஊடகத்தின் சாத்தியத்தை உணர நாம் தவறிவிட்டோம். பைரஸியில் ஈடுபடுபவர்கள் இதில் நம்மை மிஞ்சி விட்டனர். சிலருக்குத் திரையரங்கில், சிலருக்குத் தொலைக்காட்சியில், சிலருக்குத் தங்களது மொபைல் போன்களில் படம் பார்ப்பது பிடிக்கும்.

ரசிகருக்கு ஏற்றவாறு, பிடித்தவாறு படம் பார்க்கும் வாய்ப்பை நாம் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. அதைப் பைரஸியில் இருப்பவர்கள் பயன்படுத்திக்கொள்கின்றனர். அவர்கள் செய்வது சரி எனச் சொல்லவில்லை. அது சட்டவிரோதமானதுதான். ஆனால் அதே நேரத்தில் நாமும் அதற்கென ஒரு வியாபார முறையை இன்னும் கொண்டு வரவில்லை. அது பைரஸியை சமாளிக்கும். போலீஸோ, வழக்குகளோ, நீதிமன்ற உத்தரவோ, தனிநபர் போராட்டமோ அதைச் சமாளிக்காது. அது ஒரு எல்லை வரைதான்.

என்ன நடக்கவேண்டுமென்றால், தொலைபேசியில் படத்தை பார்க்கவிரும்புபவர், தனது தொலைபேசியில் நல்ல தரத்தில், காசு கொடுத்து படத்தை பார்க்கும் வசதியை ஏற்படுத்தித் தரவேண்டும். அப்போது அவர்கள் பைரஸியை தேடிச் செல்வது குறையும்" என்று தெரிவித்துள்ளார் ராஜமெளலி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in