

தமிழ் சினிமா உலகுக்கு நம்பிக்கையளிக்கும் இயக்குநர்களில் ஒருவர் சிம்புதேவன். ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ தொடங்கி தனக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன் படங்களை எடுத்துவரும் இவர், இப்போது ‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’ படப்பிடிப்பை முடித்துவிட்டு, டப்பிங்கில் மும்முரமாக இருக்கிறார். தனது திரையுலகப் பயணத்தைப் பற்றி ‘தி இந்து’விற்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டி.
‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’ படத்தின் தலைப்பே ஒரு கதையை சொல்கிறதே?
இந்தப் படம் ஒரு ரொமாண்டிக் காமெடி படம். நாலு நண்பர்களுக்குள் ஏற்படும் பிரச்னையை அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதுதான் கதையின் கரு. நமக்கான பொருளை யாருக்கும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் எடுக்கும் முடிவால் என்னவாகிறது என்பதை காதல், காமெடி எல்லாம் கலந்து சொல்லியிருக்கிறேன். என் முந்தைய படங்களைப் பார்த்து மக்கள் எப்படி சந்தோஷப் பட்டார்களோ, அதே போல் இந்தப் படத்தைப் பார்க்கும்போதும் சந்தோஷப்படுவார்கள்.
அருள்நிதி நடிப்பில் முதன் முறையாக வரும் ஒரு முழு நீள நகைச்சுவைப் படம் இது. அவர் எப்படிச் செய்திருக்கிறார்?
நன்றாக செய்திருக்கிறார். அவருடைய முகத்திற்கு நீங்க எந்த ஒரு கேரக்டர் கொடுத்தாலும் செட்டாகும். அந்த மாதிரி முகங்கள் இங்கே நிறைய கிடைக்காது. இதற்கு முந்தைய படங்களில் பார்த்த அருள்நிதியை விட, இந்த படத்தில் நீங்கள் வித்தியாசமான அருள்நிதியைப் பார்க்கலாம். முதன் முறையாக கல்லூரி முடித்த ஒரு சவடாலான கேரக்டர் பண்ணியிருக்கிறார். படம் பார்க்கிறவர்களுக்கு கண்டிப்பாக இது புதியதாக இருக்கும்.
‘இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்' படத்திற்கு பிறகு ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி?
தனுஷ், வடிவேலு ஆகியோருடன் படங்கள் செய்திருக்க வேண்டியது. சின்னச் சின்ன காரணங்களுக்காக தள்ளிப் போய் இருக்கிறது. சினிமாவில் நம்மைத் தாண்டி பல்வேறு விஷயங்கள் ஒரு படத்தினை தீர்மானிக்கும். இந்த இடைவெளியில் என்னால் என்ன முடியுமோ அதற்கு என்னை நான் தயார்படுத்திக்கொண்டேன். திட்டமிட்ட தாமதம் எல்லாம் கிடையாது.
‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ 2ம் பாகம் கதை தயாராகி விட்டதா?
அந்தப் படமும் ஆரம்பித்திருக்க வேண்டியது. நடுவில் வடிவேலு வேறு ஒரு படம் செய்துகொண்டு இருக்கிறார். நானும் இந்த படத்தை ஆரம்பித்துவிட்டேன். அவர் அந்தப் படத்தை முடித்துவிட்டு வரவேண்டும். மற்றபடி அந்தப் படத்திற்கான கதையெல்லாம் தயார்.
ஏ.ஆர்.முருகதாஸும் நீங்களும் ஒரே அறையில் இருந்தவர்கள். இரண்டுபேரும் இப்போதும் தொடர்பில் இருக்கிறீர்களா?
நண்பர்களாக அடிக்கடி பேசிக்கொள்வோம். சினிமாவில் எல்லாருக்கும் ஒரு தனித்துவம் இருக்கும். இப்போதும் நட்பு ரீதியாக, நிறைய பேசிக்கொள்கிறோம்.
நீங்கள் ஒரு கார்ட்டூனிஸ்ட். இப்போது இயக்குநர். கார்ட்டூனிஸ்ட் சிம்புதேவன் இயக்குநர் சிம்புதேவனுக்கு எந்த அளவிற்கு உதவியாக இருக்கிறார்?
ஒரு கார்ட்டூனிஸ்ட் என்றால் விமர்சகன் என்ற பார்வை வந்துவிடும். விமர்சகன் என்றால் ஒரு விஷயத்தினை முழுவதுமாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதைத்தான் நகைச்சுவையாக கார்ட்டூனிஸ்ட் வெளிப்படுத்துவார். இதையே என்னால் கதையிலும் பண்ண முடியும். இது ஒரு ப்ளஸ்.
கார்ட்டூனிஸ்ட்டாக இருந்து நிறைய வரைந்ததால் சினிமாவில் ஸ்டோரி போர்டு தயார் செய்வதற்கு ரொம்பவே உதவியாக இருக்கிறது. கேமிராமேனுக்கும் ஆர்ட் டைரக்டருக்கும் ஸ்டோரி போர்டை வைத்து ஒரு விஷயத் தினை எளிதாக என்னால் புரிய வைக்க முடிகிறது.
நீங்கள் தயாரிப்பாளர் சிம்புதேவனாக மாறப் போறதா கேள்விப் பட்டோம்?
ஆம். உண்மை தான். விரைவில் தயாரிப்பேன்.
சீரியஸான படங்களை இயக்க மாட்டீர்களா?
அப்படியெல்லாம் இல்லை. எல்லாருக்குமே என்ன வரும் என்பதை தெரிந்து வைத்துக்கொண்டு செய்வது நல்லது. 4 படங்கள் தான் பண்ணியிருக்கேன். சில காலத்திற்கு பிறகு வெவ்வேறு கதை களங்கள் கொண்ட படங்களும் பண்ணுவேன்.