

முருகானந்தம் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் 'கதாநாயகன்', ஜுன் 23ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு
'மாவீரன் கிட்டு' படத்தைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் முருகானந்தம் இயக்கும் படத்தில் நடித்து வந்தார் விஷ்ணு விஷால். கத்ரீன் தெரசா, சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.
'கதாநாயகன்' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்த இதன் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு முடிவு பெற்றுள்ளது.
விஷ்ணு விஷால் தயாரித்து வரும் இப்படத்தின் வெளியீட்டு உரிமையை ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும், இறுதிகட்ட பணிகள் அனைத்தும் முடிவுற்று ஜுன் 23ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.
தற்போது 'முண்டாசுப்பட்டி' ராம் இயக்கத்தில் உருவாகிவரும் படத்தில் நடித்து வருகிறார் விஷ்ணு விஷால்.