

திருட்டு டிவிடியைக் கட்டுப்படுத்த 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படக்குழு புதிய முயற்சி ஒன்றை கையாண்டிருக்கிறது.
சாம் ஆண்டன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, சரவணன், 'நான் கடவுள்' ராஜேந்திரன், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு'. ஜூன் 17-ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருக்கிறது.
தற்போது படம் வெளியாகும் நாளிலேயே திருட்டு டிவிடி வெளிவந்துவிடுகிறது. இதனைக் கட்டுபடுத்த புதிய யுக்தி ஒன்றை கையில் எடுத்திருக்கிறது படக்குழு.
இது குறித்து படக்குழு, "திருட்டு டிவிடிக்களை ஒழிக்கும் ஒரு முன்மாதிரி முயற்சியை முன்னெடுத்துள்ளது லைக்கா தயாரிப்பு நிறுவனம். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் திரைப்படம் 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு'. இத்திரைப்படத்துக்கு வர்த்தக ரீதியான டிரேட்மார்க் பதிவு ஒப்புதல் எண்ணை அறிவுசார் காப்புரிமை மையத்திலிருந்து இந்நிறுவனம் பெற்றுள்ளது. அந்த எண்: O-0000780028.
இவ்வாறாக பதிவு செய்துள்ளதன் மூலம் சட்டவிரோதமாக இப்படத்தை தரவிறக்கம் அல்லது பதிவேற்றம் செய்பவர்களுக்கு எதிராக லைக்கா சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள முடியும். இத்தகைய முயற்சி திரையுலகில் முதல் முயற்சி. இதன் மூலம் திருட்டு டிவிடிக்கள் தயாரிப்பவர்களை தண்டனைக்கு உட்படுத்த முடியும்" என்று லைக்கா நிறுவனம் அறிவித்திருக்கிறது.