

இந்தியாவில் எந்தொரு நடிகருக்கும் இல்லாத வகையில் 'கபாலி' படத்துக்காக ஏர் ஏசியா நிறுவனம் புதிதாக விமானம் ஒன்றை தயார் செய்திருக்கிறது.
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கபாலி'. தாணு தயாரித்திருக்கும் இப்படம் தணிக்கைக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள். ஜூலை 22ம் தேதி இப்படம் வெளியாகும் என தகவல் வெளியாகி இருக்கிறது.
ஜூலை 15ம் தேதியில் இருந்து ஜூலை 22ம் தேதி 'கபாலி' வெளியீடு மாறியிருந்த தகவல் வெளியானது. தயாரிப்பாளர் தாணு இப்படத்தை பல்வேறு வகையில் விளம்பரப்படுத்த திட்டமிட்டு இருக்கிறார். மேலும், பல்வேறு நிறுவனங்களும் தங்களது பொருட்களின் மூலமாக 'கபாலி'யை விளம்பரப்படுத்த அனுமதிக்கோரி வருகிறார்கள்.
இந்நிலையில், ஏர் ஏசியா நிறுவனம் 'கபாலி' படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் படக்குழுவோடு ஒப்பந்தம் போட்டது. அதற்காக தனியாக 'கபாலி' படத்தின் புகைப்படங்கள், போஸ்டர்கள் ஒட்டப்பட்ட ஒரு விமானத்தை தயார் செய்தது.
இந்த விமானத்தில் பயணம் செய்து சென்னைக்கு 'கபாலி' படம் பார்ப்பதற்காக டிக்கெட் முன்பதிவை தொடங்க இருக்கிறார்கள். தற்போது இந்த விமானம் ஹைதராபாத் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் எந்தொரு நடிகரின் படத்தையும் இதேபோல் விமானத்தில் விளம்பரப்படுத்தியதில்லை. இதுவரை ஹாலிவுட் படங்களே இவ்வாறு விளம்பரப்படுத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.