

நடிகர் மயில்சாமியிடம் செல்போனில் பேசி ரூ.50 ஆயிரம் கேட்டு மிரட்டிய பெண்ணையும், அவரது நண்பரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
காமெடி நடிகர் மயில்சாமி, சென்னை சாலிகிராமத்தில் வசித்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமை காலை இவரது செல்போனுக்கு ஒரு மிஸ்டு கால் வந்தது. மாலையில் அந்த நம்பருக்கு தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் மயில்சாமி. மறுமுனையில் பேசிய நபர், ‘நான் போலீஸ்காரன். விபச்சார வழக்கில் ஒரு பெண்ணைப் பிடித்துள்ளேன். அவரது செல்போனில் உங்கள் செல்போன் நம்பர் உள்ளது. ரூ.50 ஆயிரம் கொடுத்தால் இந்த விஷயத்தை வெளியில் தெரியாமல் மறைத்து விடுவேன். இல்லையென்றால் பத்திரிகைகளுக்கு கொடுத்து உங்கள் பெயரை கெடுத்து விடுவேன்' என்று மிரட்டியிருக்கிறார். பின்னர் அதே நம்பரில் இருந்து ஒரு பெண்ணும் பேசியுள்ளார். ‘போலீஸ்காரர் கூறியபடி இன்றே பணத்தை கொடுத்து விடுங்கள்’என்று கூறியிருக்கிறார்.
இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசில் மயில்சாமி புகார் கொடுத்திருக்கிறார். போலீசார் வழக்கு பதிந்து, மிரட்டல் விடுத்த நபர்களை தேடி வருகின்றனர்.
மிரட்டல் குறித்து கேட்டபோது மயில்சாமி கூறியதாவது:
எனக்கு தினமும் பலர் போன் செய்வார்கள். படப்பிடிப்பில் இருக்கும்போது என்னால் பேச முடியாது. இதனால் மாலையில் எனது போனுக்கு வந்த மிஸ்டு கால் அனைத்துக்கும் நானே தொடர்பு கொண்டு பேசுவேன். இது எனது வழக்கம். என்னிடம் போனில் உதவி கேட்ட பலருக்கு பண உதவி செய்திருக்கேன்.
கடந்த மாதம் கும்பகோணத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் மகன் மருத்துவ செலுவுக்கு ரூ.10 ஆயிரம் அனுப்பினேன். மிரட்டல் போன்கால் வந்த எண்ணில் இருந்து பலமுறை ஒரு பெண் என்னிடம் பேசியிருக்கிறார். அவர் மலையாளம் கலந்த தமிழில் பேசுவார். அவர் என்னிடம் ஊருக்கு செல்ல பணம் இல்லை என்று கூறி இரண்டு, மூன்று முறை ரூ.1000 வாங்கியிருக்கிறார். அவர் என்னை மிரட்டியது கிடையாது.
ஆனால் இப்போது போனில் பேசிய ஆணும், பெண்ணும் என்னை ஏமாற்றி பணம் பறிக்க முயற்சிக்கின்றனர். என்னை மிரட்டிய பெண் தன்னை பெண் போலீஸ் என்று கூறினார். உடனே விருகம்பாக்கம் காவல் நிலையத்துக்கு சென்று, என்னை மிரட்டிய பெண் போலீஸ் யார் என்று கேட்டேன். எல்லோரும் என்னைப் பார்த்து சிரித்து விட்டனர்.
இவ்வாறு மயில்சாமி கூறினார்.