

நடிகர் ரஜினிகாந்த் நன்கொடை தொகையை உடனடியாக பிரதமரிடம் அளித்து, திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எழுப்பிய கேள்விக்கு ரஜினியின் சகோதரர் பதிலளித்திருக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்த் பூரண நலம் பெற வேண்டி தஞ்சாவூர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் ரஜினியின் சகோதரர் சத்திய நாராயணா கலந்து கொண்டார்.
பூஜை முடிவுற்றவுடன் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிய சத்திய நாராயணா "ரஜினிகாந்த் உடல் பரிசோதனைக்காகவே வெளிநாடு சென்றிருக்கிறார். நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார் ரஜினி. 'கபாலி' பட வெளியீட்டிற்கு முன்பு சென்னை திரும்புவார்.
நதி நீர் இணைப்பு திட்டத்துக்காக 1 கோடி ரூபாய் வங்கி கணக்கில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டு இருக்கிறது. அவர் சொன்னால் செய்து விடுவார். நதி நீர் இணைப்பு பணிகள் துவங்கப்படும் போது அந்த நிதி வழங்கப்படும்" என்று தெரிவித்தார் ரஜினியின் சகோதரர் சத்திய நாராயணா.
முன்னதாக, தேசிய, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் சமீபத்தில் திருச்சியில் நடைபெற்றது. அதில் "கங்கை-காவிரி இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற ரூ.1 கோடி நன்கொடை அளிப்பதாக, நடிகர் ரஜினிகாந்த் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். அந்த தொகையை உடனடியாக பிரதமரிடம் அளித்து, திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்" என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிட்டத்தக்கது.